Home நாடு “வெள்ளிக்கிழமைக்குள் பக்காத்தானை பதிவு செய்யுங்கள்- இல்லையேல்…” – சங்கப் பதிவிலாகாவுக்கு எச்சரிக்கை

“வெள்ளிக்கிழமைக்குள் பக்காத்தானை பதிவு செய்யுங்கள்- இல்லையேல்…” – சங்கப் பதிவிலாகாவுக்கு எச்சரிக்கை

1025
0
SHARE
Ad
Saifuddin-Abdullah_pakatan sec gen
சைபுடின் அப்துல்லா – பக்காத்தான் ஹரப்பான் தலைமைச் செயலாளர்

கோலாலம்பூர் – தங்களின் விண்ணப்பத்தை ஏற்று தேசிய முன்னணி கூட்டணியைப் போன்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியையும் சங்கப் பதிவிலாகா எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பக்காத்தான் கூட்டணி சங்கப் பதிவிலாகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்காத்தான் ஹரப்பானின் கூட்டணியின் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் சுரியாத்தி இப்ராகிமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் வழி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது ஜசெக மத்திய செயற்குழுவுக்கான மறு-தேர்தல் குறித்த அறிக்கைக்கும், பெர்சாத்து கட்சியின் ஆண்டுக்கூட்ட அறிக்கைக்கும் இன்னும் காத்திருப்பதாகவும், அதன் காரணமாக பக்காத்தானின் பதிவை அங்கீகரிக்க இயலாது என்றும் சங்கப் பதிவிலாகாவின் தலைமைச் செயலாளர் சுரியாத்தி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

pakatan harapan-logoதற்போது இந்த இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் இனியும் பக்காத்தானின் பதிவை சங்கப் பதிவிலாகா ஏன் தாமதப்படுத்துகிறது என்றும் சைபுடின் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜசெகவின் மறு-தேர்தலை சங்கப் பதிவிலாகா அங்கீகரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும் பெர்சாத்து கட்சியின் ஆண்டுக் கூட்டத்தை சங்கப் பதிவிலாகா இன்னும் அங்கீகரிக்கவில்லை.

பெர்சாத்து கட்சியின் ஆண்டுக்கூட்டத்திற்கு எதிராக ஒரே மாதிரியான வடிவத்தில் எழுதப்பட்ட 400 கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக ஓர் அணி பெர்சாத்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது என்றும் அதன் தலைவர் துன் மகாதீர் சாடியுள்ளார்.

இந்நிலையில்தான் அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக சங்கப் பதிவிலாகா பக்காத்தானின் பதிவுக்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் பக்காத்தான் சார்பாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் அப்துல்லா அறிவித்துள்ளார்.