புதுடில்லி – பிப்ரவரி மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற வடமேற்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றின் சட்டமன்றத் தேர்தல்களிலும் ஆளும் பாஜக கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்து தனது அரசியல் ஆதிக்கத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு வந்த திரிபுரா மாநிலத்தில் அந்தக் கட்சியைத் தோற்கடித்து பாஜக ஆட்சியில் அமர்கிறது. வடமேற்கு மாநிலங்களிலும் கால்பதிக்கும் பாஜகவின் குறிப்பிடத்தக்க வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 44 தொகுதிகளையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 15 இடங்களையும் கைப்பற்றின. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஓர் இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.
நாகலாந்து மாநிலத்திலும் பாஜக ஊடுருவல்
நாகலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 31 சட்டமன்றங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. என்.பி.எஃப் எனப்படும் நாகா மக்கள் முன்னணி கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மற்ற கட்சிகள் 3 தொகுதிகளை வென்றுள்ள நிலையில், இங்கேயும் காங்கிரஸ் எந்த ஓர் இடத்தையும் பெற முடியாத அளவுக்கு மாபெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
இந்த மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேகலாயாவில் காங்கிரசுக்கு ஆறுதல்
மூன்று மாநிலங்களில் மேகாலாயாவில் மட்டுமே காங்கிரசுக்கு சற்றே ஆறுதல் கிடைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநிலத்தில் 21 தொகுதிகள் கிடைத்திருக்கின்றன. எனினும் இது பெரும்பான்மை வெற்றி அல்ல. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. எனினும், இந்த வெற்றி பாஜக அந்த மாநிலத்தில் கால்பதிக்க அதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
என்பிபி எனப்படும் தேசிய மக்கள் கட்சி மேகலாயாவில் 19 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மற்ற கட்சிகள் 17 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து என்பிபி மற்ற கட்சிகளுடன் இணைந்து மேகாலாயாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.