Home தேர்தல்-14 சபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி! ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான்

சபா: 2 தொகுதிகளின்தான் வெற்றி! ஆனால் முதல்வரை முடிவு செய்தார் ஜெப்ரி கித்திங்கான்

1132
0
SHARE
Ad
மூசா அமானுக்கு ஆதரவு தரும் ஜெப்ரி கித்திங்கான்

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் முதலமைச்சராக தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மூசா அமான்.

பொதுத் தேர்தல் முடிந்து நேற்று வியாழக்கிழமை முழுவதும் சபா தலைநகர் கோத்தா கினபாலுவில் அரசியல் நாடகங்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து வியாழக்கிழமை இரவு 11.10 மணியளவில் மூசா அமான் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (மொத்தம் 60 தொகுதிகள்)

தேசிய முன்னணி -29

#TamilSchoolmychoice

வாரிசான் – 21

ஜசெக – 6

பிகேஆர் – 2

சொலிடாரிடி (ஸ்டார்) – 2

இந்த முடிவுகளைத் தொடர்ந்து, புதன்கிழமை (9 மே) மூசா அமானும், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டாலும் அடுத்த சபா அரசாங்கத்தை அமைக்க இரவோடிரவாக சபா ஆளுநரைச் சந்திக்க ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். ஆனால் ஆளுநர் துன் ஜூஹார் மஹிருடின் அவர்களைச் சந்திக்க அனுமதி தரவில்லை.

இதைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருக்கும் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான உப்கோவின் (UPKO- UNITED PASOKMOMOGUN KADAZANDUSUN MURUT ORGANISATION)  தலைவரும் துவாரான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மாடியஸ் தங்காவ், ஷாபி அப்டாலுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், உப்கோ தேசிய முன்னணியில் இருந்து விலகி ஷாபி அப்டாலின் வாரிசான் கட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.

ஆனாலும், உடனடியாக அவரது கட்சியைச் சார்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களும் மாடியசின் அறிவிப்பில் தங்களுக்கு உடன்பாடு இல்லையென்றும், தாங்கள் தொடர்ந்து தேசிய முன்னணியில் நீடிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டார் கட்சியின் தலைவரும் பிங்கோர் சட்டமன்றத் தொகுதியில் வென்றவருமான ஜெப்ரி கித்திங்கான், தனது கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் மூசா அமானுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார்.

இந்த அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வராக நியமனம் பெற மூசா அமானின் பலம் 31 ஆக உயர்ந்தது. எனவே, தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என மூசா அமான் பிற்பகல் 2.00 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு மூசா அமான் சபாவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டார் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் சபா மாநில அரசாங்கத்தில் இடம் பெறுவார்களா அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.