கோலாலம்பூர் – நாம் காண்பது கனவா? நனவா? என நம்மை கிள்ளிப் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
அந்த அளவுக்கு நம்ப முடியாத அளவில் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
மன்னிப்பு வாரியம் இன்று காலை கூடி அன்வாரை விடுதலை செய்ய முடிவெடுத்ததைத் தொடர்ந்து செராஸ் மறுவாழ்வு மையத்திலிருந்து, கோட்டும் சூட்டும் அணிந்து, தனது வழக்கமான புன்னகையும், உற்சாகமும் பொங்கி வழிய விறுவிறுவென்று நடந்து வந்து கார் ஏறினார் அன்வார்.
மருத்துவமனையைச் சுற்றி ஆதரவாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்தனர். அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அன்வார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாமன்னரைக் காண அரண்மனைக்கு விரைந்தார்.
பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது, துன் மகாதீர் “நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு பெற்றுத் தருவோம். அவரை விடுதலை செய்வோம். அடுத்த துணைப் பிரதமராகக் கொண்டு வந்து, அவர் அடுத்த பிரதமராக வழி விட்டுச் செல்வேன்” எனக் கூறி வந்தார்.
அப்போதைக்கு ஓர் அரசியல் பிரச்சாரமாகத்தான் இது பார்க்கப்பட்டது என்றாலும், பொதுமக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர்.
பக்காத்தான் ஆட்சிக்கு வந்து மகாதீர் பிரதமராகப் பதவியேற்றவுடன் மூன்றே அலுவலக நாட்களில் அன்வாரின் அரச மன்னிப்புக்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவரை விடுதலை செய்திருக்கிறார் மகாதீர்.