Home வணிகம்/தொழில் நுட்பம் ராஜ் உணவகம் நிரந்தரமாக மூடப்படலாம்!

ராஜ் உணவகம் நிரந்தரமாக மூடப்படலாம்!

1299
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அசுத்தமான நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பங்சார் ராஜ் வாழை இலை உணவகம் நிரந்தரமாக மூடப்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் (மேயர்) டான்ஸ்ரீ முகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் அந்த உணவகத்தின் அனுமதியை இரத்து செய்ய தான் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நடவடிக்கை மூலம், மற்ற கோலாலம்பூர் உணவகங்களுக்கு ஒரு வலுவான செய்தியை எடுத்துரைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நாம் மிகவும் மென்மையாக நடந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இதுபோன்ற முறைதவறிய நடவடிக்கைகள் உணவகங்களில் நடைபெறுகின்றன” என்றும் டத்தோ பண்டார் தெரிவித்திருக்கிறார்

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் இலாகாவின் இயக்குநர் டாக்டர் நூர் அக்மா ஷாபுடினும் ராஜ் வாழை இலை உணவகத்தை நிரந்தரமாக மூடுவதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரமற்ற முறையில் அசுத்தமான சாக்கடைத் தண்ணீரில் சாப்பிடும் தட்டுகளை அதன் ஊழியர்கள் கழுவும் காணொளி சமூக ஊடங்களில் பரவியதைத் தொடர்ந்து தலைநகர் பங்சாரிலுள்ள  ராஜ் வாழை இலை உணவகம் அமுலாக்க அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை (மே 30) முதல் மூடப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்த உணவகத்தைச் சோதித்த சுகாதார அமைச்சு 3 புகார்களை அந்த உணவகத்தின் மீது சுமத்தியுள்ளது. சுகாதார அமைச்சில் உணவகத்தைப் பதிவு செய்யாதது, தனது ஊழியர்களுக்கு டைபாயிட் தடுப்பூசி போடாதது, உணவுகளைக் கையாளும் பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்காதது போன்ற 3 புகார்களை அந்நிறுவனத்தின் மீது சுகாதார அமைச்சு சுமத்தியுள்ளது.