Home நாடு மாமன்னருக்கான செலவினம்: அன்வார் கண்டனம்

மாமன்னருக்கான செலவினம்: அன்வார் கண்டனம்

1519
0
SHARE
Ad
மாமன்னரை அண்மையில் அன்வார் சந்தித்தபோது…

கோலாலம்பூர் – மாமன்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், துன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர்களுக்கான மன்றத்தின் ஊடகத் துறை பொறுப்பாளருமான ஏ.காடிர் ஜாசின் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை  (ஜூன் 6) பிகேஆர் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் “காடிர் ஜாசின் கருத்துகள் அரண்மனைக்கு எதிரான  தரக்குறைவான விமர்சனங்களாகும். தனி மனிதனின் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றாலும் இந்த விவகாரத்தில் மேலும் கண்ணியமான, மரியாதையான நடைமுறை பின்பற்றப் பட்டிருக்க வேண்டும். அத்துடன் அரச தரப்பில் பதில் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் இவ்வாறு கருத்துகள் கூறுவது முறையல்ல” என்றும் அவர் சாடினார்.

காடிர் ஜாசின் தனது வலைப் பதிவில், “அரசாங்கம் அரச தரப்பை நல்ல முறையில்தான் கவனித்துக் கொள்கிறது. அதனால்தான் மாமன்னருக்கு மொத்தம் 256.9 மில்லியன் ரிங்கிட் கடந்த 16 மாதங்களில் ஆடம்பரமான அளவில் செலவிடப்பட்டிருக்கிறது. தங்கும் செலவினங்கள், அரண்மனை செலவினம், சொந்த பயன்பாட்டிற்கான பொருட்கள், விமானம் மற்றும் போக்குவரத்து செலவினங்கள், உடன் செல்பவர்களுக்கான கருவிகள், ஆடைகள், பரிசுப் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்கான சம்பளம் ஆகிய காரணங்களுக்காக இந்தத் தொகை செலவிடப்பட்டிருக்கின்றது” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

எனினும் இந்த செலவினங்களுக்கான ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்து காடிர் ஜாசின் தெரிவிக்கவில்லை. நிதியமைச்சு அறிக்கைகளின்படி மாமன்னருக்கு ஆண்டுக்கு 13.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

காடிர் ஜாசினுக்குப் பதிலளித்த அன்வார், அரசாங்கம் அரச தரப்புக்காக ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து குறைகூறுவது முறையல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.