மாஸ்கோ – ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு.
பிரான்ஸ்தான் அது! ஆனால் 1998-ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை அதனால் வெல்ல முடியவில்லை.
மற்றொரு நாடு தென் அமெரிக்காவில் காற்பந்தை உயிருக்குயிராக நேசிக்கும் நாடுகளில் ஒன்று. அன்று டியகோ மரடோனா என்ற அற்புத விளையாட்டாளரையும், இன்று மெஸ்ஸி என்ற இலாவகமான விளையாட்டாளரையும் தந்த நாடு – அதுதான் அர்ஜெண்டினா!
கடந்த காலங்களில் சில தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற நாடு அர்ஜெண்டினா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த இருநாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கான ஆட்டம் பரபரப்பான ஆட்டமாகவும், இரசிகர்களுக்கு அற்புத விருந்தாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
வெல்லும் குழு மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்பதால் இரண்டு நாடுகளுமே வெற்றியடையக் கடுமையாகப் போராடும் என்பதை விளக்கிக் கூறத் தேவையில்லை.
இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு அஸ்ட்ரோ தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டை – மலேசிய இரசிகர்களோடு உலக அளவில் கோடிக்கணக்கான காற்பந்து இரசிகர்களும் கண்டு களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.