Home வணிகம்/தொழில் நுட்பம் சிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்

சிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்

1240
0
SHARE
Ad
நசிர் ரசாக் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – சிஐஎம்பி வங்கியின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும், வங்கித் துறை நிபுணர்களில் ஒருவருமான நசிர் துன் ரசாக் விலகவிருக்கிறார்.

தனது பதவிக் காலம் முடிவடையும்போது மீண்டும் சிஐஎம்பி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்புக்கு நிற்கப் போவதில்லை என நசிர் இயக்குநர் வாரியத்திடம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசு சார்பு நிறுவனங்கள் பலவற்றின் தலைவர்கள் – நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோரின் தலைகள் அடுத்தடுத்து உருளும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் நசிர் ரசாக்கின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கி சிஐஎம்பி (CIMB). நீண்டகாலமாக அந்த வங்கியின் முத்திரையாகவும், முகமாகவும் வலம் வந்தவர் நசிர் துன் ரசாக். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரர்.

மிக இளம் வயதிலேயே வங்கித் துறையில் உயர் பதவிகளை அவர் அடைந்ததற்கு குடும்பப் பின்புலமும், அவரது அண்ணன் நாட்டின் பிரதமராக இருந்ததும்தான் முக்கியக் காரணங்கள் என்று கூறப்பட்டாலும், தனக்கென – தனது அறிவாற்றலுக்கென ஒரு தனி மரியாதையை சம்பாதித்துக் கொண்டவர் நசிர் ரசாக்.

தவறாது தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்யும் பழக்கம் கொண்டவர்.

சிஐஎம்பி வங்கியிலிருந்து விலகிய பின்னர் தனது தலைமையின் கீழ் தனி முதலீட்டு நிதி ஒன்றைத் தொடக்கி அதனை நிர்வகிக்கப் போவதாகவும் நசிர் ரசாக் தெரிவித்துள்ளார்.