Home நாடு சாகிர் நாயக் சர்ச்சையால் பக்காத்தான் கூட்டணியில் பிளவு

சாகிர் நாயக் சர்ச்சையால் பக்காத்தான் கூட்டணியில் பிளவு

1571
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய சாகிர் நாயக் விவகாரத்தால் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலும் பிளவுகள் – விரிசல்கள் ஏற்படும் அபாயங்கள் தென்படுகின்றன.

கடந்த தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே வெடித்தது  சாகிர் நாயக் விவகாரம். அப்போது சாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும், அவரால் மலேசியாவில் மத ரீதியான பிளவுகள் ஏற்படுகிறது என எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டன.

குறிப்பாக, பக்காத்தான் கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகளில் இருந்த இந்தியத் தலைவர்கள் சாகிர் நாயக் விவாகரத்தில் தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கடுமையாகக் குறைகூறினர்.

அன்றைய பிரதமருக்கும் சர்ச்சையைத் தேடித் தந்த சாகிர் நாயக்
#TamilSchoolmychoice

தேசிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகித்த மஇகாவும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியது. சாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றனர்.

தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது சாகிர் நாயக் விவகாரம்.

சாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துங்கள் என விண்ணப்பம் ஒன்றை இந்திய அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சனை எதனையும் உருவாக்காவிட்டால் சாகிர் நாயக்கை நாடு கடத்த மாட்டோம் என மகாதீர் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மகாதீரின் அறிக்கை தொடர்பில் இந்து இயக்கங்களும், இந்து ஆலயங்களும் இணைந்த கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைந்து சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றன.

மஇகா இளைஞர் பகுதித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன் “அன்று சாகிர் நாயக் விவகாரத்தில் மஇகாவைக் குறைகூறிய நம்பிக்கைக் கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் தற்போது மௌனம் சாதிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எல்லா விவகாரங்களிலும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்திருக்கும் மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் இதுவரை சாகிர் நாயக் விவகாரத்தில் தனது கருத்து எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

எனினும் பினாங்கு துணை முதல்வரும் ஜசெக தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் பி.இராமசாமி துணிச்சலாக சாகிர் நாயக்கிற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். “இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருக்கும் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பான ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும். இந்தியா சாகிர் நாயக்கை நாடுகடத்த வேண்டுகோள் விடுத்தால் அதனை ஏற்று மலேசியா செயல்பட வேண்டும்” என இராமசாமி கூறியிருக்கிறார்.

இவ்வாறாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்களிடையே பிளவுகள் ஏற்படுத்தப்படுவதற்கும், முரண்பாடான அறிக்கைகள் வெளியிடப்படுவதற்கும், பக்காத்தான் தலைவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுப்பப்படுவதற்கும் நாயகனாக – காரணகர்த்தாவாக சாகிர் நாயக் உருவெடுத்திருக்கிறார்.

-இரா.முத்தரசன்