புத்ரா ஜெயா – இன்று திங்கட்கிழமை காலையில் பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்த பிரதமர் துறை துணையமைச்சரும் சிப்பாங் அமானா நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் ஹனிபா மைடின் நலமுடன் இருப்பதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய துன் மகாதீர் அந்த சந்திப்பின் இறுதியில் “ஹனிபா மைடின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
மயங்கி விழுந்த ஹனிபா மைடின்
பிரதமர் துறை ஊழியர்களிடையே நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர் உரையாற்றிக் கொண்டிருந்த போது மேடையில் இருந்த ஹனிபா மைடின் திடீரென மயங்கி விழுந்தார்.
அவருக்கு உடனடியாக முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த இரண்டு தவணைகள் வெற்றி பெற்ற 50 வயதான முகமட் ஹனிபா மைடின், அண்மையில் பிரதமர் துறை துணையமைச்சராக சட்டப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.
ஹனிபா மைடின் ஒரு வழக்கறிஞருமாவார்.