Home நாடு “குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை

“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை

970
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இஸ்மாயில் சாப்ரிக்கு தனது தலைமையிலான தேசியக் கூட்டணி ஆதரவு தந்திருப்பதாக மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார்.

“தேசியக் கூட்டணி, இஸ்மாயில் சாப்ரி பிரதமர் ஆவதற்கான ஆதரவு நிபந்தனையுடன் கூடியது – அம்னோவில் ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருப்பவர்கள் யாரும் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் நாங்கள் ஆதரவு வழங்கியிருக்கிறோம்” என மொகிதின் யாசின்  அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

தேசியக் கூட்டணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இந்த அடிப்படையில்தான் நாங்கள் வழங்கியுள்ளோம் என மொகிதின் மேலும் தெரிவித்துள்ளார். தேசியக் கூட்டணியில் பெர்சாத்து, பாஸ், ஆகியவை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அம்னோ இடம் பெறவில்லை.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடின் விடுத்திருந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதத்தில் மொகிதின் யாசின் அறிக்கை அமைந்திருக்கிறது.

மொகிதினின் இரட்டை நிலைப்பாட்டையும், முரண்பாட்டையும் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியைச் சேர்ந்தவருமான முகமட் ஹானிபா மைடின் சாடியிருந்தார்.

“நீங்கள் சொன்னதற்கும் செய்திருப்பதற்கும் முரண்பாடாக இருக்கிறதே உங்களின் கொள்கை என்னவாயிற்று?” என கேள்வி எழுப்பியிருந்தார் ஹானிபா மைடின்.

“அன்று அம்னோ தலைவர்கள் ஊழல் செய்தார்கள் என்று கூறி, அம்னோவிலிருந்து விலகி பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்தவர் மொகிதின். இப்போது அதே அம்னோ உதவித் தலைவரைப் பிரதமராகக் கொண்ட ஆட்சிக்கு ஆதரவு தந்திருக்கிறார் மொகிதின்.பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்திய அதே கூட்டணியை மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதிப்பதன் மூலம் உலகுக்கு என்னவிதமான செய்தியை நாம் கூறப் போகிறோம்?” என்றும் ஹனிபா மைடின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் நிபந்தனையுடன்தான் ஆதரவளிக்கிறோம் என மொகிதின் அறிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், தேசியக் கூட்டணியின் தலைவராக மொகிதினே தொடர்வார் என்பதும் உறுதியாகியிருக்கிறது.