Home நாடு கொவிட்-19; தடுப்பூசிகள் 50 விழுக்காட்டுக்கும் மேல் செலுத்தப்பட்டன!

கொவிட்-19; தடுப்பூசிகள் 50 விழுக்காட்டுக்கும் மேல் செலுத்தப்பட்டன!

3222
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிக அளவில் இருந்து வரும் நிலையில், இன்னொரு புறத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுவரையில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நேற்று ஆகஸ்ட் 19 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 22,948 ஆக அதிகரித்தது. இதுவரையில் பதிவான ஒரு நாள் தொற்றுகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும்.

#TamilSchoolmychoice

இதில் 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். எஞ்சியவை உள்நாட்டிலேயே பீடிக்கப்பட்ட தொற்றுகளாகும்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக இருந்து வருகிறது.

நேற்று வரையிலான ஒருநாள் மரண எண்ணிக்கை 178 ஆகப் பதிவாகியது என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 13,480 ஆக உயர்ந்திருக்கிறது.

மரணமடைந்தவர்களில் 143 பேர் மருத்துவமனைகளிலேயே மரணமடைந்திருக்கின்றனர். மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் 35 பேர்கள் ஆகும்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம்.

ஒருநாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,720 ஆகப் பதிவாகியது. இது தொடர்பான புள்ளி விவரங்களை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,489,460 என உயர்ந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,060 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியிலான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தது. கோலாலம்பூர் 1,439 தொற்றுகளைப் பதிவு செய்தன.

பினாங்கு, பேராக், ஜோகூர், கிளந்தான், சரவாக் ஆகிய 5 மாநிலங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்தன.

கெடா, சபா இரண்டு மாநிலங்களும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்திருக்கின்றன.