
கோலாலம்பூர் : பிரதமராகப் பதவி விலகிய மொகிதின் யாசின் எந்தக் காலத்திலும் ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க மாட்டேன், ஆதரவு தர மாட்டேன் எனக் கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் சாஹிட் ஹாமிடி, நஜிப் துன் ரசாக் போன்றவர்களை உள்ளடக்கிய அம்னோவுக்கு ஆதரவு தராமல் வேறு விதமான முடிவெடுப்பாரா என்ற ஆரூடங்கள் எழுந்தன.
ஆனால், மீண்டும் அம்னோவின் ஆட்சிக்கே மொகிதின் ஆதரவு தந்துள்ளார். ஒரு முக்கியமான காலகட்டத்தில் தனக்கு ஆதரவாக நின்ற இஸ்மாயில் சாப்ரி பிரதமராக ஆதரவு தந்திருக்கிறார் மொகிதின்.
மொகிதினின் இந்த இரட்டை நிலைப்பாட்டையும், முரண்பாட்டையும் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் அமானா கட்சியைச் சேர்ந்தவருமான முகமட் ஹானிபா மைடின் சாடியுள்ளார்.
“நீங்கள் சொன்னதற்கும் செய்திருப்பதற்கும் முரண்பாடாக இருக்கிறதே உங்களின் கொள்கை என்னவாயிற்று?” என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஹானிபா மைடின்.
“அன்று அம்னோ தலைவர்கள் ஊழல் செய்தார்கள் என்று கூறி, அம்னோவிலிருந்து விலகி பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்தவர் மொகிதின். இப்போது அதே அம்னோ உதவித் தலைவரைப் பிரதமராகக் கொண்ட ஆட்சிக்கு ஆதரவு தந்திருக்கிறார் மொகிதின்.பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்திய அதே கூட்டணியை மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதிப்பதன் மூலம் உலகுக்கு என்னவிதமான செய்தியை நாம் கூறப் போகிறோம்?” என்றும் ஹனிபா மைடின் கேள்வி எழுப்பினார்.