Home நாடு மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

1019
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மீண்டும் அடுக்கடுக்கான அரசியல் திருப்பங்கள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன.

மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து மொகிதின் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு வேட்பாளரை பிரதமராக ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களும் – சுயேச்சையாக இயங்கும் – ஆனால் பெர்சாத்து கட்சியை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் – இணைந்து மொத்தம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சத்தியப் பிரமாணங்கள் மூலம் அந்தப் பிரதமர் வேட்பாளரை ஆதரித்துள்ளனர்.

“நாம் பிரிந்து நின்றால் எதையும் சாதிக்க முடியாது. சிறிய கட்சியாக இருப்பதால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே ஒரு பிரதமர் வேட்பாளரை ஆதரிப்போம். அதன் மூலம் நமது வலிமையைக் காட்ட முடியும். அந்த வேட்பாளர் பிரதமராகத் தேர்வு பெற்றால் மீண்டும் அரசாங்கத்திலும் நாம் இடம் பெற முடியும்” என பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மொகிதின் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த முடிவுக்கு அவர் பாஸ் கட்சியையும், சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணியையும் உதாரணம் காட்டியிருக்கிறார். எந்த முடிவை எடுத்தாலும் அவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே அணியாக முடிவெடுக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெர்சாத்து சார்பிலான 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சத்தியப் பிரமாண ஆவணங்களை மொகிதினிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்கள் ஆதரிக்கும் அந்த வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் நகர்வுகளை வைத்துப் பார்க்கும்போது அந்தப் பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சாப்ரிதான் என்பதைக் கணிக்க முடிகிறது.

மொகிதினை ஆதரித்த 28 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இஸ்மாயில் சாப்ரி தன்பக்கம் நிலைநிறுத்த முடியுமென்றால்,

அம்னோ தலைவர் சாஹிட் இப்ராகிம் வசமிருக்கும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இஸ்மாயில் சாப்ரிக்கு கிடைக்கும் என்றால்,

அதன்மூலம் இஸ்மாயில் சாப்ரி அடுத்த பிரதமராக முடியும்!

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்களை நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என சாஹிட் ஹாமிடியும் கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சியின் 35 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமுகமாக ஒரே நபரை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கும் திருப்பம், அடுத்த பிரதமரை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.