Home கலை உலகம் “வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை

“வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை

935
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உள்ளூர் தமிழ்த் திரைப்பட உலகம் வளர வேண்டும் – செழிக்க வேண்டும் – என்ற நோக்கத்தில் பல கலைஞர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்து தமிழ்ப் படங்களை உருவாக்கித் திரையிட்டு வருகின்றார்கள். எனினும், உள்ளூர் தமிழ்ப் படங்களுக்கு போதிய ஆதரவு கிடைக்காதது, வசூல் ரீதியான தோல்விகள் ஆகியவற்றால், உள்ளூர் திரைப்படத் துறை தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.

எனினும், பல கலைஞர்கள் தொடர்ந்து விடாப்படியாக படங்களை எடுத்து வந்த நிலையில் அண்மையக் காலமாக ஏறத்தாழ மாதம் ஒரு படம் என்ற அளவில் தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட படங்கள்  வெளிவந்து மலேசியத் திரையரங்குகளை அலங்கரித்து வந்தன.

அந்த வகையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையீடு கண்ட ‘வெடிகுண்டு பசங்க’ படம் ஒரே வாரத்தில் 5 இலட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான வசூலைப் பெற்று தமிழ் திரைப்படக் கலையை வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

விமலா பெருமாள் இயக்கத்தில், டெனிஸ் குமார்- சங்கீதா நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் தமிழகத்திலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் குறிப்பாக இந்தியர்களிடையே ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கப்படும் நகைகள் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் திரையீடு காண அடுத்தடுத்து பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தப் படத்தின் கலைஞர்களுக்கும், உள்ளூர் தமிழ்த் திரைப்படத் துறையில் வணிக ரீதியாக ஈடுபட நினைப்பவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், வெடிகுண்டு பசங்க படத்தின் வசூல் சாதனை நிகழ்வதற்கு மலேசியத் தமிழ்ப் பட இரசிகர்கள் அமோக ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.

பிரபல நடிகர்களின் சில தமிழகத் திரைப்படங்கள் மலேசியாவில் திரையிடப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் படங்களோடு போட்டி போட்டுக் கொண்டு வெடிகுண்டு பசங்க படம் இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்பது இன்னொரு கவனிக்கத்தக்க அம்சமாகும்.