கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் மஇகா கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா கடிதம் இன்று வெள்ளிக்கிழமை காலை மஇகா தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்றதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் அவரது இராஜினாமாவுக்கான காரணங்கள் தெரியவில்லை.
சோதிநாதன், மத்திய செயற்குழு உறுப்பினர், தலைமைச் செயலாளர், தேசிய உதவித் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளை மஇகாவில் வகித்துள்ளார். துன் சாமிவேலுவின் அரசியல் செயலாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றிய சோதிநாதன் பின்னர் இடைத் தேர்தலின் மூலம் தெலுக் கெமாங் (தற்போது போர்ட்டிக்சன் என அழைக்கப்படும் தொகுதி) நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து துணையமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
சில நாட்களுக்கு முன்னர் மஇகாவுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ சோதிநாதன், டத்தோ ஆர்.எஸ்.மணியம், டத்தோ எஸ்.எம்.முத்து, ஜேம்ஸ் காளிமுத்து ஆகிய நால்வரையும் நியமன மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளில் இருந்து அகற்றினார்.
அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பதிலாக டத்தோ நெல்சன், டத்தோ இரவிச்சந்திரன் (மஇகா செர்டாங் தொகுதி தலைவர்), டத்தோ சுப்பிரமணியம் (கிள்ளான் தொகுதியிலுள்ள மஇகா கிளைத் தலைவர்) வழக்கறிஞர் முருகவேல் (மஇகா ஷா ஆலாம் தொகுதி தலைவர்) ஆகிய நால்வரும் நியமன மத்திய செயலவை உறுப்பினர்களாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டனர்.