Home Video பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? – சிவநேசன்...

பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)

1339
0
SHARE
Ad

பீடோர்: (14-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல மாநிலங்களில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றிருக்கும் பக்காத்தான் கூட்டணி இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படும் செல்லியலின் நேர்காணல் வரிசையில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றிருக்கும் அ.சிவநேசனை ஒரு நாளில் அவரது மக்கள் சேவை மையம் அமைந்திருக்கும் பீடோர் நகரில் சந்தித்தோம். முதல் கட்டமாக எப்போதுமே சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வந்திருக்கும் பேராக் மாநிலத்தில் இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலம் குறித்த அவரது விளக்கங்கள் இடம் பெறுகிறது)

அ.சிவநேசன் அரசியலுக்கும் சமூகப் போராட்டத்திற்கும் புதியவரல்ல. ஒரு தொழிற்சங்க வாதியாக, வழக்கறிஞராக அரசியலிலும், சமூகத்துக்கான களப் போராட்டத்திலும் நீண்ட காலம் போராடி வந்த சிவநேசன், 2004 பொதுத் தேர்தலில் சுங்கை சட்டமன்ற ஜசெக வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர்.கணேசனிடம் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து அந்தத் தொகுதியிலேயே மக்கள் சேவை மையம் அமைத்து உழைத்து வந்ததன் பலனாக மக்கள் ஆதரவைப் பெற்று 2008 பொதுத் தேர்தலில் இரண்டாவது முயற்சியில் சுங்கை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்த முறை அவர் பெற்ற பெரும்பான்மை 1,454 வாக்குகள். தோற்கடித்தது மஇகா-வேட்பாளர் (டான்ஸ்ரீ) எஸ்.வீரசிங்கத்தை!

#TamilSchoolmychoice

அந்தப் பொதுத் தேர்தலில் பேராக் மாநில ஆட்சியையும் கைப்பற்றியது அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணி. ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் சிவநேசன். எனினும் அடுத்த ஓராண்டிலேயே, பேராக் மாநில அரசாங்கம், சில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல்களால் 2009-ஆம் ஆண்டில் தேசிய முன்னணியால் கவிழ்க்கப்பட்டது.

எனவே, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் 2018-இல் பதவியேற்பது என்பது இரண்டாவது முறையாகும்.

2 ஆயிரம் ஏக்கர் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது எப்படி?

“2008 பொதுத் தேர்தலில் பேராக் மாநில அரசாங்கத்தை அமைத்ததும், சீனப் பள்ளிகளுக்கு உதவுவதற்காக 2 ஆயிரம் நிலத்தையும், மலாய்-இஸ்லாமியப் பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் வழங்க அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணி முன்வந்தது. ஆனால் தமிழ்ப் பள்ளிகளுக்கு என்று எந்த நிலமும் வழங்கப்படவில்லை. ஆட்சிக் குழுவில் இதை நான் கொண்டுவந்ததும், அதற்கான பரிந்துரையைத் தயாரித்து சமர்ப்பிக்கும்படி ஆட்சிக் குழு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பேராக் மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப் பள்ளிகளும் எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் பெறும் வகையில், 2 ஆயிரம் வழங்கப்பட ஒரு பரிந்துரை மனுவைச் சமர்ப்பித்தேன். ஆனால், அதனைச் செயல்படுத்துவதற்கு முன்பே பேராக் மாநில அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது” என்று இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கத் தொடங்குகிறார் சிவநேசன்.

“மீண்டும் தேசிய முன்னணி அரசாங்கம் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நாங்கள் பக்காத்தான் மூலம் புதிதாக ஏற்படுத்தியிருந்த நடவடிக்கைகளை மீண்டும் பேராக் மாநில அரசாங்கத்திடம் வலியுறுத்தி தொடர்வதற்கு மஇகாவுக்கு வசதியாகி விட்டது. அதன்படி 2,000 ஏக்கர் நிலம் வழங்கும் எங்களின் பரிந்துரை மூலம் மஇகா தேசிய முன்னணி அரசாங்கத்திடம் இருந்து அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பெற்றுவிட்டது. ஆனால், அந்த நிலத்தை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் மஇகா மேற்கொண்ட நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை. நிலத்தை தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் மேம்படுத்துவதற்கு எங்களுக்கு ஆட்சேபணையில்லை. இன்னும் சொல்லப் போனால் எனது பரிந்துரையிலேயே தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் அந்த நிலத்தை மேம்படுத்தலாம் என நானே குறிப்பிட்டிருந்தேன் என்று கூறும் சிவநேசன் தற்போதுள்ள பிரச்சனைகள் குறித்து பின்வருமாறு மேலும் விளக்குகிறார்:

“ஆனால் இந்த நிலம் தற்போது ஒரு அறவாரியத்தின் கீழ் வந்து விட்டது. 9 பேர் கொண்ட இந்த அறவாரியத்தின் மூலம் நிலம் நிர்வகிக்கப்பட்டு, அதனை கண்காணிக்கும் வழிமுறைகளோ, அதில் கிடைக்கக் கூடிய வருமானம் எப்படி தமிழ்ப் பள்ளிகளுக்கோ இந்திய சமுதாயத்திற்கோ சென்றடையும் என்பது போன்ற நடைமுறைகளோ இல்லை. இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் இந்த நிலத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் தொடர்பில்லாத நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது”

தீர்வு என்ன?

சிவநேசன் சுட்டிக் காட்டும் மற்றொரு முக்கிய அம்சம் இந்த நிலம் 2 ஆயிரம் ஏக்கர் என்று கூறப்பட்டாலும் அதில் 400 ஏக்கர் பாறைகளும், பயன்பாட்டுக்கு உதவாத பகுதிகளாகவும் இருப்பதால், இந்திய சமுதாயத்திற்கு தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய நிலத்தில் 1,600 ஏக்கர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது. “400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறது என்பதை நானே சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்தேன்” என்கிறார் சிவநேசன்.

“நான் ஆட்சிக் குழு பொறுப்பை ஏற்றதும் 2 ஆயிரம் ஏக்கர் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறேன். முதல் கட்டமாக அந்த அறவாரியத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனால் இன்னும் பதில் இல்லை. அடுத்ததாக, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழு ஒன்றை அமைத்து இந்த நிலம் தொடர்பான அறவாரியத்தின் ஆவணங்களை சட்ட ரீதியாக ஆராய்ந்து வருகிறோம். நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தமிழ்ப் பள்ளிகளுக்கும் இந்திய சமுதாயத்தின் கல்விக்கும் எவ்வாறு சென்று சேர வேண்டும் என்பதை நிர்ணயிப்போம். பேராக் மாநில அரசாங்கத்தின் கண்காணிப்பு அறவாரியத்தின் மீது இருக்கும்படி சட்டரீதியாக விதிமுறைகளை உருவாக்குவோம். அந்த அறவாரியத்தின் பெயரில் இருக்கும் நில உரிமங்கள் மக்களுக்கானவை என்பதை சட்ட ரீதியாக முறைப்படுத்துவோம். இந்திய சமுதாயத்திற்கும் இந்த நிலத்திற்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்வோம். இந்தியர்களின் உழைப்பாலும் முதலீட்டாலும், நன்கொடையாலும் தொடங்கப்பட்ட பல அமைப்புகள் இன்றைக்கு தனியார் கைகளுக்குப் போய்விட்ட அவல நிலை போல் இந்த நிலத்திற்கும் ஏற்பட வழிவிட மாட்டோம்” என சூளுரைக்கிறார் சிவநேசன்.

தனது நடவடிக்கைகளுக்காக – பேராக் மாநிலத்தில் இந்தியர்களுக்கான கல்வியை உயர்த்தும் இந்த முயற்சிக்காக – ஆட்சிக் குழுவும் மாநில மந்திரி பெசாரும் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்கிறார் சிவநேசன்.

-இரா.முத்தரசன்

அ.சிவநேசன் செல்லியலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலை கீழ்க்காணும் செல்லியல் அலை இணைப்பில் காணலாம்:

அடுத்து:

“பேராக் மாநில அரசுப் பணிகளின் இந்தியர்களின் விழுக்காட்டை உயர்த்துவோம்” நேர்காணலில் சிவநேசன்.