மலேசியாவைப் பிரதிநிதித்து அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டியில் கலந்து கொள்ளும் இவ்விரு மாணவர்களையும் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் இன்று புதன்கிழமை வெகுச் சிறப்பாக நடந்தது.
பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் தற்போது புதிய உத்வேகத்தைக் காண முடிகின்றது. பலவகையான போட்டிகளில் கலந்துகொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்களும் இப்பொழுது உலக அளவில் சாதனை படைக்க புறப்பட்டுவிட்டனர். ஐந்தாம் ஆண்டில் படிக்கும் முகமது பைசுல் மற்றும் விலோசினி சுந்தரராஜன் ஆகிய இரண்டு மாணவர்கள் இளம் ஆய்வாளர்களாக அனைத்துலக நிலைப் போட்டிக்குச் செல்வது பேராக் மாநிலத்திற்கு மட்டுமல்லாது மலேசியாவுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இந்தச் சாதனை மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் நிறைய இருக்கின்றது. அதோடு, இந்தக் குழுவினருக்கு ஆலோசகராக இருந்து உதவிகள் செய்துள்ள தென்னரசு குப்புசாமி அவர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. பேராக் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் தொடர்ந்து பெரிய பெரிய சாதனைகளைப் படைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று திறப்புரையாற்றிய பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தெரிவித்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி மாணவர்களின் இந்த வெற்றிப் பயணம் பற்றி உரையாற்றினார். பள்ளியின் அறங்காவலர் அமுசு விவேகனந்தா பெரியசாமி பிள்ளை, மாவட்ட மன்ற உறுப்பினர்கள் ஆலன் கண்ணன், காசிநாதன் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி இராமசாமி உள்ளிட்ட சுங்கை சிப்புட் வட்டார இயக்கத் தலைவர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் எனத் திரளானோர் இந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.