Home நாடு அமரர் எம்.துரைராஜ்: “உதயம் முதல் இதயம் வரை…சில நினைவுகள்…சில அனுபவங்கள்…”

அமரர் எம்.துரைராஜ்: “உதயம் முதல் இதயம் வரை…சில நினைவுகள்…சில அனுபவங்கள்…”

1720
0
SHARE
Ad

(கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் அவர்கள் குறித்த சில நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1977-ஆம் ஆண்டு!

மஇகாவின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் (துன்) ச.சாமிவேலுவும், (டான்ஸ்ரீ) சி.சுப்பிரமணியமும் களமிறங்கி மும்முரமாகத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலகட்டம். அப்போது குமுதம், நயனம் போன்ற இதழ்களின் அளவில் கையடக்க நூலாக – சாமிவேலுவுக்கு ஆதரவாக – “நாடாளுமன்றத்தில் நமது குரல்” – என்ற தலைப்பில் பிரச்சாரக் கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தக் கையேட்டின் முகப்பில் பின்னணியில் நாடாளுமன்றக் கட்டடம் தெரிய – அதன் முன்பு கம்பீரமான தோற்றத்துடன் சாமிவேலு நிற்க – வெளியிடப்பட்ட அந்த கையேட்டின் உள்ளே அப்போது சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாமிவேலு நாடாளுமன்றத்தில் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகள் குறித்துப் பேசியிருந்த உரைகளின் சில அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

1977 கட்சித் தேர்தலில் மஇகா வாக்காளர்களிடையே சாமிவேலுவுக்கான ஆதரவை அந்தக் கையேடு அதிகரிக்கச் செய்தது என்று கூட சிலர் சொல்வார்கள்.

அந்தப் பிரச்சாரக் கையேட்டின் வடிவமைப்பும், உள்ளடக்கமும், சுப்பிரமணியம் அணியில்கூட சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது என்றும் – யார் இதை இப்படி பேராளர்களை ஈர்க்கக் கூடிய முறையில் இவ்வளவு நல்ல முறையில் தயாரித்தது என அலசப்பட்டது என்றும் – அந்தத் தேர்தலில் பணியாற்றியவர்கள் கூறுவார்கள்!

சாமிவேலுவுக்காக அந்தப் பிரச்சாரக் கையேட்டைப் பின்னணியில் இருந்து தயாரித்துக் கொடுத்தவர் எம்.துரைராஜ்.

ஆனால், கால ஓட்டத்தில் அவருக்கும் சாமிவேலுவுக்கும் இடையிலான அந்த நெருக்கம் குறைந்து, அரசியல் ரீதியாக டான்ஸ்ரீ சுப்ரா, டத்தோ பத்மா ஆகியோர் பக்கம் நின்று ஆதரவு தந்தார் துரைராஜ்.

எனினும், துரைராஜ் மறைந்தபோது, உணர்ச்சிகரமான, உள்ளப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார் சாமிவேலு. “எனக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கொடுத்து மலேசிய இந்தியர்களிடையே பெரிய அளவிலான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தவர் துரைராஜ். பல விஷயங்களை எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தார்” என உளமார்ந்த நன்றியோடு தெரிவித்தார் சாமிவேலு.

அடுத்தடுத்த நாட்களில் மறைந்த எம்.துரைராஜ், ஆதி.இராஜகுமாரன்…

இப்படியாக, நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்கள் அனைவருடனும் பரிச்சயமும், நட்பும், நெருக்கமும் இருந்தபோதும், துரைராஜ் நேரடி அரசியலில் ஈடுபடவே இல்லை. அரசாங்கப் பணி ஒருபுறம் தடுத்திருக்கலாம் என்றாலும், இறுதிவரை தனது உழைப்பையும், கவனத்தையும் எழுத்து, இலக்கியம் என்றே திசை திருப்பி வாழ்ந்தார்.

உதயம் – இலக்கியப் பணி

தகவல் இலாகாவின் தயாரிப்பாக, துரைராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக உதயம் வெளிவந்த காலகட்டம் தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு பொற்காலம் என்றே கூறலாம். வெறும் 30 காசு விலையில், அழகான வழவழப்பான அட்டை, உள்ளே உயர்தரக் காகிதம், தெளிவான அச்சு, என அனைவரும் வியக்கும் வண்ணம் வெளிவந்த ‘உதயம்’ அரசாங்கத்தின் பிரச்சார ஏடாக அதிகாரபூர்வமாக வெளிவந்தாலும், அதில் பிரச்சார நெடி வீசாத வண்ணம், பல்வேறு புதுமைகளையும், புத்தாக்கத்தையும் அதில் சேர்த்தார்.

அதன் காரணமாக, உதயம் சந்தையில் ஆயிரக்கணக்கில் மக்களால் காசு கொடுத்து வாங்கி படிக்கப்பட்டது.

அதில் துரைராஜ் செய்த ஒரு புதுமை சாதாரண மக்களையும் அதை வாங்கிப் படிக்கச் செய்தது.

அப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு தமிழ்ப் படத்தை ஆர்எடிம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். அது என்ன படம் என்பதை ஒளியேறும் தினத்தில் வெளியாகும் தமிழ் நாளிதழில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். உதயம் வெளிவந்தபோது, தகவல் இலாகாவின் வெளியீடு என்பதால், அதில் அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் ஒளியேறப்போகும் நான்கு வாரங்களுக்கான அத்தனை படங்களின் பெயர்களையும் உதயத்தில் பிரசுரித்தார். அதன் காரணமாக, இந்த மாதத்தில் ஒளியேறப் போகும் தமிழ்ப் படங்கள் எவை என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் உதயம் வாங்கத் தொடங்கினார்கள்.

உதயத்தில் எனது முதல் சிறுகதை

1977-ஆம் ஆண்டில் நான் எழுதிய ‘அவள் இன்னும் சாகவில்லை’ என்ற எனது முதல் சிறுகதையை உதயம் இதழில் வெளியிட்டவரும் துரைராஜ்தான். அப்போது நான் யார், எங்கிருக்கிறேன் என எந்த விவரங்களும் துரைராஜூவுக்குத் தெரியாது. இருந்தாலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் தாரக மந்திரமாகக் கொண்டிருந்த அவர் நல்ல எழுத்தையும், ஆர்வம் மிக்க எழுத்தாளர்களையும் எப்போதும் ஊக்குவித்தார்.

எனது கதை உதயத்தில் வெளிவந்த பின்னரே அவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு பல தளங்களில் அவருக்கும் எனக்குமான நட்புறவு தொடர்ந்தது. பார்க்கும் போதெல்லாம் “எழுதுங்கள்” என எப்போதும் ஊக்குவிப்பார்.

பத்திரிக்கைத் தொழில் மீது அவருக்கு அபாரமான மரியாதையும் பக்தியும் இருந்தது. அதனால்தான், தமிழ் அறிந்தவர்கள் யாராவது வேலை கேட்டால் அவர்களை பத்திரிக்கைகளுக்கு வேலை செய்ய சிபாரிசு செய்தார்.

அரசாங்கப் பணியில் ஓய்வு பெற்றாலும் ‘இதயம்’ என்ற மாத இதழைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ‘இதயம்’ பத்திரிக்கை நின்று போன பின்னரும், தொடர்ந்து பத்திரிக்கைகளில் அவ்வப்போது கட்டுரைகளையும், சில வரலாற்று சம்பவங்களையும் எழுதி வந்தார்.

எழுத்தாளர்களை பத்திரிக்கைப் பணிக்கு ஊக்குவித்தவர்

இளமைப்பருவத்தில் தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களை யார் பார்த்தாலும் “எழுத்தாளராக வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே. நன்கு படித்து உருப்பட வழியைப் பாருங்கள்” எனப் பொதுவாக எல்லோரும் கூறிக் கொண்டிருக்க, துரைராஜ் ஒருவர்தான் அத்தகைய எழுத்துப் பணியைப்போற்றி அத்தகைய இளம் எழுத்தாளர்களை மனதார ஊக்குவித்தவர்.

அதனால்தான், பத்திரிக்கைத் துறையில் பல சிஷ்யர்களை அவர் கொண்டிருந்தார். அனைவரும் ‘பிதாமகர்’ என அவரை அழைத்தது வெறும் அலங்கார வார்த்தையோ, அவரது வயது கருதியோ அல்ல! மாறாக, அந்த வார்த்தைக்கு ஏற்ப அவர் பலருக்கு பத்திரிக்கைத் துறையிலும், எழுத்துலகப் பணியிலும் உண்மையிலேயே வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் திகழ்ந்தார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக…

துரைராஜ் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவராக இருந்த காலகட்டத்தில் ஒரு தவணைக்கு அவரது தலைமைத்துவத்தின் கீழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராக இருந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக அவர் சங்கத்தை சரியான முறையில் வழிநடத்தி, பல புதுமையான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பல நல்ல திட்டங்களை செயல்படுத்திவிட்டுத்தான் தனது பொறுப்பை தனக்குப்பின்னர் ஆதி.குமணனிடம் ஒப்படைத்தார்.

தொலைக்காட்சிப் பணிகள், தகவல் இலாகா பணிகள், தனிப்பட்ட எழுத்தோவியங்கள், உதயம், இதயம் போன்ற பத்திரிக்கைப் பணிகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் சமூகப்பணிகள் என பல்வேறு முனைகளில் மலேசியத் தமிழ் இலக்கிய உலகை செப்பனிட்டதிலும், செதுக்கியதிலும், சீர்திருத்தியதிலும் துரைராஜ் அவர்களுக்கு வரலாற்றுப் பக்கங்களில் என்றும் நிரந்தர இடம் உண்டு.

-இரா.முத்தரசன்

பின்குறிப்பு:

(நாளை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு அமரர்கள் எம்.துரைராஜ்-ஆதி.இராஜகுமாரன் இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சி மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் மஇகா தலைமையகக் கட்டடத்தின் நேதாஜி அரங்கில் நடைபெறவிருக்கிறது)