கோலாலம்பூர் – கடந்த 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களையே ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் வழி செவிமெடுத்து வந்த மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக நம்பிக்கைக் கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்கொள்ளப் பெரும் எதிர்பார்ப்புகளோடு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட லிம் குவான் எங் – பிரதமர் துன் மகாதீரின் வழிகாட்டுதலோடு சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டம் இது என்ற அம்சமும் இணைந்து கொள்ள அரசியல், வணிக வட்டாரங்களில் இன்றைய வரவு செலவுத் திட்டம் பெரும் ஆவலோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 4.00 மணியளவில் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றுவார்.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தில் வெளியிடப்படும் முக்கிய அம்சங்களை செல்லியல் ஊடகம் உடனுக்குடன் வாசகர்களுக்கு வழங்கும்.
மேலும், நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டத்தின் ஆகக் கடைசியானத் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் 011-10003001 என்று எண்ணுக்கு வாட்ஸ்எப் குறுஞ்செயலியின் வழி அழைத்து ‘Hello MOF’ என தட்டச்சு செய்து அனுப்பினால் அவர்களுக்கு உடனுக்குடன் வரவு செலவுத் திட்டம் குறித்த தகவல்கள் பகிரப்படும்.