Home நாடு அசோஜன் மஇகா நிர்வாகச் செயலாளராக நியமனம்

அசோஜன் மஇகா நிர்வாகச் செயலாளராக நியமனம்

1169
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவின் புதிய நிர்வாகச் செயலாளராக ஜோகூர் மாநில மஇகாவின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ எம்.அசோஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு முதல் 2018 வரை சுமார் 14 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 2008 முதல் 2013 வரை ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து அனுபவம் பெற்றவர் அசோஜன் ஆவார். ஜோகூர் மாநில மஇகா தலைவராகவும் பல ஆண்டுகள் பதவி வகித்த அனுபவத்தைக் கொண்ட அசோஜன் இதுவரையில், துன் சாமிவேலு, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகிய 3 தேசியத் தலைவர்களின் கீழ் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகாவும், மஇகா தலைமையகமும் உருமாற்றத்தை நோக்கியும், கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் முக்கியமான காலகட்டத்தில் மஇகாவின் நிர்வாகச் செயலாளராக முக்கியப் பொறுப்பை அசோஜன் ஏற்றுள்ளார்.

மாநில நியமனங்கள் எப்போது?

#TamilSchoolmychoice

கட்சித் தேர்தல்கல் நடைபெற்று முடிந்து, புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மஇகாவின் 72-வது தேசியப் பொதுப் பேரவையும்,  கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, மஇகாவில் பல்வேறு நிலைகளிலும் புதிய நியமனங்களையும், பல்வேறு பதவிகளுக்கான புதிய நியமனங்களையும் மஇகாவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக மாநில ரீதியில் ஒவ்வொரு மாநிலத்திலும் 10 செயற்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் ஒருவர் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார். மற்ற 9 பேரில் இருந்து மாநிலப் பதவிகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

அவ்வாறு மாநிலத் தலைவராகவும், மற்ற மாநிலப் பொறுப்புகளுக்கும் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மஇகாவில் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநில ரீதியான புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டவுடன்தான், மஇகாவின் உருமாற்றங்களும் முழு வீச்சுடன் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.