கோலாலம்பூர் : (மாலை 5.00 மணி நிலவரம்) இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் மாலை 4.00 மணிக்கு சமர்ப்பித்த 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர் விடுத்திருக்கும் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
- 2019 ஜனவரி 1 முதல் அனைத்து உணவகங்களிலும் சிகரெட் புகைப்பது தடை விதிக்கப்படுகிறது.
- தங்களின் வருமானங்களை இதுவரையில் முறைப்படி அறிவிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அவ்வாறு தங்களின் வருமானங்களைத் தாமே முன்வந்து அறிவிப்பவர்களுக்கு சிறப்புக் கழிவுகள் வழங்கப்படும்.
- 3 முக்கிய இலக்குகளோடு 2019 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகார மையங்களாகத் திகழும் அரசாங்க அமைப்புகளை சீர்திருத்தம் செய்வது, மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம், வணிகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஆகியவை அந்த 3 இலக்குகள் ஆகும்.
- 30 ஏப்ரல் 2018 வரை முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 7 பில்லியன் ரிங்கிட்டை 1எம்டிபி கடன் பாக்கிக்காக இரகசியமாக செலுத்தியிருக்கிறது.
- 2019 வரவு செலவுத் திட்டம் “நேர்மைமிக்க மலேசியா, துடிப்பான பொருளாதாரம், வளமான மக்கள்” என்ற பொது சித்தாந்தத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிப் பள்ளிகளுக்கும் சமயப் பள்ளிகளுக்கும் இதே போன்று தலா 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
- எல்ஆர்டி 3 – முழுமையான திட்டம் அரசாங்கத்தின் பேச்சு வார்த்தைகளின் மூலம் முந்தைய செலவினமான 31.6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 16.6 பில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
- 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் இதுவரையில் திருடப்பட்டிருக்கும், அல்லது காணாமல் போயிருக்கும் பணத்தை மீட்டுக் கொண்டுவர அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது. அந்தவகையில் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட இக்குனாமிட்டி உல்லாசக் கப்பலை ஏலம் விடும் முயற்சிகளில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டிருக்கிறது.
- ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் எஸ்.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் 10 மடங்கு அதிகமான பொருட்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)