கோலாலம்பூர் – தலைநகரின் மையப் பகுதியில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கண்கவரும் நினைவுச் சின்னக் கட்டடத் தொகுதியாக திகழ்ந்து வருவது டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் சுல்தான் அப்துல் சமாட் கட்டடத் தொகுதி (படம்).
மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்டடம், ஒரு காலத்தில் மலாயாவை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைமையகமாகவும், பின்னர் அரசாங்க அலுவலகமாகவும், சில காலத்திற்கு நீதிமன்றமாகவும், பாரம்பரியக் கண்காட்சியகமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது.
நவம்பர் 2-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் சமர்ப்பித்த 2019 வரவு செலவுத் திட்டத்தில் சுல்தான் அப்துல் சமாட் கட்டடத் தொகுதி கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய மையமாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மேம்பாடு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றின் துணையோடு மேற்கொள்ளப்படும்.
1894 மற்றும் 1897-ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இந்த பாரம்பரியக் கட்டடத்தின் வரலாற்றையும், கால ஓட்டத்தில் அதன் பயன்பாடுகளையும் கீழ்க்காணும் பெர்னாமா வரைபடம் விவரிக்கிறது.