கோலாலம்பூர் : (மாலை 5.45 மணி நிலவரம்) இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் மாலை 4.00 மணிக்கு 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவரது உரையில் அவர் வழங்கியிருக்கும் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
- தற்போது ஆண்டுக்கு 120 மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் சூதாட்ட விடுதிகளுக்கான (கேசினோ) உரிமத்துக்கான தொகை (லைசென்ஸ்) இனி ஆண்டுக்கு 150 மில்லியனாக உயர்த்தப்படுகிறது.
- ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நிதி உதவிக்காக 5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 4.1 மில்லியன் குடும்பங்கள் பயனடையும்.
- 2019, ஜூன் 1-ஆம் தேதி முதல் விமானப் பயணங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் பயண வரி விதிக்கப்படும்.
- ஒரு நபருக்கு ஒரு கார் வீதம் மட்டுமே இனி பெட்ரோல் உதவித் தொகை வழங்கப்படும். 1500 சிசி கொள்ளளவு அல்லது அதற்கும் கீழான கொள்ளளவு கொண்ட கார்களுக்கு மட்டுமே பெட்ரோல் உதவிநிதி வழங்கப்படும். மேலும் ஒரு நபருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் என்ற அளவில் 125 சிசி அல்லது அதற்கும் குறைவான கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே பெட்ரோல் உதவிநிதி இனி வழங்கப்படும்.
- அரசாங்கத்திற்கான பெட்ரோலிய உதவித் தொகை ரோன் 95 (RON95) இரக பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 30 காசு வீதம் வழங்கப்படும். இந்த உதவித் தொகை ஒரு மாதத்திற்கு ஒரு காருக்கு 100 லிட்டர் பெட்ரோலுக்கு மட்டுமே வழங்கப்படும். அதே போல ஒரு மாதத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மட்டுமே 40 லிட்டருக்கான பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கப்படும்.
- ஓய்வு பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு தலா 500 ரிங்கிட் உதவித் தொகை ஒருமுறைக்கு மட்டும் வழங்கப்படும்.
- மாதம் 2 ஆயிரம் ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவாகப் பெறும் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகை ஆண்டுக்கு வழங்கப்படும்.
- மாதம் ஒன்றுக்கு 2,001 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 750 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
- 3,001 முதல் 4,000 ரிங்கிட் வரை மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும்.
- அரசாங்க ஊழியர்கள் வசிக்கும் அரசாங்கக் குடியிருப்புகளில் மறுசீரமைப்பு தேவைப்படும் குடியிருப்புகளுக்காக 400 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)