ஈப்போ – பேராக் மாநில ரீதியிலான தீபாவளி விருந்துபசரிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 11-ஆம் தேதி புந்தோங் இடைநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் அறிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள தீபாவளி சந்தையைச் சுற்றிப் பார்த்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது சிவநேசன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
சிவநேசன் மாநில அரசாங்கத்தின் சுகாதாரம், பயனீட்டார் விவகாரம், தேசிய ஒற்றுமை மற்றும் மனிதவளத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமாவார்.
பேராக் மாநிலத்தின் இந்த தீபாவளி உபசரிப்புக்கு அனைவரும் வருகை தந்து தீபாவளி கொண்டாட்டக் கோலாகலத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் சிவநேசன் கூறினார்.
இதற்கிடையில் தீபாவளியை முன்னிட்டு ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் பொருட்களின் விலை உயர்வுகள் எதனையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை என்றும் சிவநேசன் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களும், ஆடை அணிகலன்களும் நியாயமான விலைகளில் விற்கப்படுவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்த சிவநேசன் இதன் காரணமாக பயனீட்டாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாது என்றும் கூறினார்.
இந்த முறை தீபாவளியை முன்னிட்டு 96 சிறுவணிகக் கடைகள் ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் அமைக்கப்பட்டு, தீபாவளிப் பொருட்கள் மற்றும் இந்தியர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தன.