ஈப்போ – இதுவரையில் தீர்வையற்ற பகுதியாக லங்காவி தீவு மட்டுமே இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 2) சமர்ப்பிக்கப்பட்ட 2019 வரவு செலவுத் திட்டத்தில் பங்கோர் தீவும் இனி தீர்வையற்ற பகுதியாக இயங்கும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார்.
இதன் மூலம் பல்வேறு தரப்பட்ட வணிகங்களை ஈர்த்து, பேராக் மாநிலத்தின் புதிய வளர்ச்சி வட்டாரமாக பங்கோர் தீவு உருமாறும் என்றும், இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்வையற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் லங்காவி தீவு எந்த அளவுக்கு வாணிபத் துறையில் அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்தது என்பதை மலேசியர்கள் கடந்த 30 ஆண்டுகளில் கண்கூடாகப் பார்த்தார்கள்.
இது குறித்துக் கருத்துரைத்த பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் பங்கோர் தீவின் முழுமையான ஆற்றலும் வளங்களும் வெளிக் கொணரப்படும் எனத் தெரிவித்தார்.
அதே வேளையில் பேராக் மாநிலத்திற்கு அதிக அளவிலான சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் தமது மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் நிதியமைச்சரின் திட்டம் பெருமளவில் உதவி புரியும் என்றும் அகமட் பைசால் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.