Home நாடு சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற இரத்தக் களறிப் போராட்டம்

சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற இரத்தக் களறிப் போராட்டம்

1479
0
SHARE
Ad

சுபாங் – இங்குள்ள 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அந்த இடத்திலேயே நிலை நிறுத்தும் போராட்டம், கடுமையான கைகலப்புகள், மோதல்கள், அடிதடிகள், கார்கள் கவிழ்ப்பு, வாகனங்கள் எரிப்பு என இரத்தக் களரிப் போராட்டமாக இன்று திங்கட்கிழமை அதிகாலையில் உருமாறியது.

ஏராளமான காவல் துறையினர் இங்கு தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகள் மோதல்களாக உருவெடுத்தன என காவல் துறையினர் கூறினர். எனினும், பலர் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அங்கு நடக்கும் மோதல்களைக் காணொளிகளாக (வீடியோ) வெளியிட்டனர்.

#TamilSchoolmychoice

அந்த காணொளிகளின்படி, இந்தியர் அல்லாத இனத்தைச் சேர்ந்த பலர் ஆயுதங்களுடன் ஆலயத்தில் புகுந்ததாகவும், அங்குள்ளவர்களைத் தாக்கியதாகவும் காணொளிகளில் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், சட்டத்திற்கு விரோதமான வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டாம் எனவும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏறத்தாழ 200 அல்லது 300 பேர் அந்த ஆலய வளாகத்தில் குழுமியிருக்கலாம் என காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. சில வாகனங்கள் புரட்டிப் போடப்பட்டுள்ளன. 18 வாகனங்கள் வரை தீயிடப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை இலாகா தெரிவித்ததாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆலயத்தை அகற்ற நில மேம்பாட்டாளர் ஒன் சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனம் நீதிமன்ற உத்தரவு பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சீ பீல்ட் ஆலய நடவடிக்கைக் குழுத் தலைவர் சுவாமி இராமாஜி அந்த ஆலயத்தை விழித்திருந்து கண்காணிக்கும் போராட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்றிரவு தொடர்ந்து பக்தர்கள் அந்த ஆலயத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மோதல்கள் வெடித்து இரத்தக் களறி சம்பவமாக அது உருமாறியுள்ளது.