Home One Line P1 அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை

அடிப் தந்தையின் வழக்கை சந்திக்கத் தயார்!- காவல் துறை

670
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணம் தொடர்பாக காவல் துறை மீதான குற்றச்சாட்டை எதிர்கொள்ள காவல் துறை தயாராக இருக்கிறது.

காவல் துறை மீது சேதங்களை கோரி மறைந்த முகமட் அடிப் முகமட் காசிமின் குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கு குறித்து விசாரிக்க காவல் துறை தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

முதலில் அந்த வழக்கின் உள்ளடக்கதைக் காண இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முகமட் அடிப்பின் மரணம் தொடர்பான காவல் துறை விசாரணையின் முடிவுகளில் அதிருப்தி அடைந்த எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முகமட் அடிப் குடும்பத்தினர் காவல் துறை மீது நீதிமன்ற நடவடிக்கையை எடுக்க உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தனர்.

அடிப் மரண விசாரணையில் காவல் துறையின் தோல்வி, அலட்சியத்தைத் தொடர்ந்து சேதங்களைக் கோர நடவடிக்கை எடுக்க இருப்பதாக அடிப் தந்தை முகமட் காசிம் ஹாமிட் தெரிவித்திருந்தார்.

தனது மகனின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

“நான் என் மகனை இழந்தேன். ஆனால், அவரது மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனவே, நான் இழப்பீடு கோர விரும்புகிறேன். டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் வெளியிட்ட அறிக்கையில, எனது குடும்பமும், நானும் மிகவும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளோம்.

“இது விசித்திரமானது என்று நான் கருதுகிறேன். குற்றச் செயலின் விளைவாக இறந்துவிட்டார் என்று மரண விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தேசிய காவல் துறைத் தலைவர் எவ்வாறு ஒரு முரண்பாடான அறிக்கையை வெளியிட்டார்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், முகமட் அடிப் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தின் விசாரணையை மதிக்காமல், முரணாக அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல் துறை அண்மையில் மறுத்தது.

உண்மைகள் எதுவும் மறைத்து பெய்யான கூற்றுகளை தாம் வெளியிடவில்லை என்று அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.

“வழங்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் விசாரணைகள், சமீபத்திய கண்டுபிடிப்புகளிலிருந்து வந்தவை. அவை விசாரணையின் முடிவுகளுக்கு முரணாக இல்லை.

“இன்றைய நிலவரப்படி, முகமட் அடிப் வழக்கு மூடப்படவில்லை. இது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302- இன் கீழ் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இன்றுவரை, முகமட் அடிப் தாக்கப்பட்டதைக் கண்டதாக சாட்சிகள் இல்லை. பெறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் செவிப்புலன் அல்லது தனிப்பட்ட கருத்துகள் என்று அவர் வலியுறுத்தினார்.

“குற்றவாளிகளை அடையாளம் காண இன்னும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசாரணையின் முடிவைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும்.

“சாட்சி கருத்துகள் மற்றும் நிபுணர்களின் அடிப்படையில் ஒரு தாக்குதல் நடந்திருந்தால், தாக்குதலின் அடையாளங்கள் இருக்கும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைக் குழு இந்த விஷயத்தை ஆய்வு செய்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக, முரண்பாடாக இருப்பதாகக் கண்டறியப்பட்ட மேலதிக சாட்சிகளையும் விசாரணைக் குழு விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

“இதேபோல் விசாரணையின் போது தங்கள் அறிக்கைகளை வழங்கும்போது புதிய தகவல்கள் அல்லது விளக்கங்களை வெளிப்படுத்திய சாட்சிகள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.

“விசாரணையில் புதிய ஆதாரங்கள் அல்லது விளக்கங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறியிருந்தார்.

அண்மையில், முகமட் அடிப் கொலை வழக்கின், முக்கியமான சாட்சி ஒருவர் அவரது சாட்சியத்தை மாற்றியதாக காவல் துறை தெரிவித்திருந்தது.

2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அன்று சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஒரு கலவரத்தைக் கண்டதாக ஷா அலாம் நீதிமன்றத்தில் முன்னர் கூறிய என்.சுரேஷ் தற்போது சாட்சியத்தை மாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.