கோலாலம்பூர்: பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக இந்தோனிசிய ஆடவர் ஒருவருக்கு இன்று வியாழக்கிழமை மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5,000 ரிங்கிட் அபராதமும் உயர் நீதிமன்றம் விதித்தது.
சீ பீல்ட் கோயிலில் பயங்கரவாதத்தை நடத்த பயிற்சி அளித்ததால், முகமட் அம்ரு லாபிஸ், 49, என்பவருக்கு இந்த தண்டனையை நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் வழங்கினார்.
வாட்சாப் குழு ஒன்றில், அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐந்து மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
பெட்டாலிங்கில் உள்ள ஜி-02-12, ஜாலான் எஸ்எம்2, தாமான் சுபாங் மாஸ் என்ற இடத்தில் மே 7 அன்று மாலை 6.12 மணிக்கு அவர் இந்த குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், முகமட் அம்ரு டாய்ஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய பொருட்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
தமது கைபேசியில் 31 படங்கள் மற்றும் எட்டு காணொளிகளை அவர் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 7- ஆம் தேதி கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரே நேரத்தில் சிறைத்தண்டனைகளை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.