Home One Line P2 திரையரங்குகள் திறக்கப்பட்டன – புதிய படங்களின் திரையீடு இன்னும் இல்லை!

திரையரங்குகள் திறக்கப்பட்டன – புதிய படங்களின் திரையீடு இன்னும் இல்லை!

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சினிமா இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்கும் அறிவிப்பு நேற்று ஜூலை 1 முதல் சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டன என்பது! ஆனால் அதில் ஒரு சிறிய ஏமாற்றமும் ஒளிந்திருக்கிறது.

புதிய படங்களுக்கான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுதான் அந்த ஏமாற்றம்!

பலவிதமான புதிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளோடு கோல்டன் ஸ்கிரீன், டிஜிவி (தஞ்சோங் கோல்டன் வில்லேஜ்) போன்ற முன்னணி திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நாடு முழுமையிலும் நிறையத் தமிழ்ப் படங்களை விநியோகிக்கும், திரையிடும் லோட்டஸ் பைஃப் ஸ்டார் நிறுவனத்தின் திரையரங்குகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.

முதல் கட்டமாக புகழ்பெற்ற, வசூலில் வெற்றி கண்ட படங்கள் திரையீடு காண்கின்றன. கட்டணங்களும் தலா 5 ரிங்கிட் என பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

குடும்பத்தினரோடு படம் பார்க்க வந்தாலும் நடுவில் ஓர் இருக்கை இடைவெளி விட்டுத்தான் அமர வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது.

ஒரு திரையரங்கில் அதிக பட்சம் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சில திரையரங்குகள் படம் பார்க்க வரும் இரசிகர்களுக்கு இலவச கார் நிறுத்தும் சலுகைகளை வழங்கியிருக்கின்றன.

கோல்டன் ஸ்கிரீன், டிஜிவி ஆகிய இரு திரையரங்கு நிறுவனங்களும் தத்தம் முகநூல் பக்கங்களில் புதிய நடைமுறைகள் கொண்ட காணொளியைப் பதிவேற்றம் செய்திருக்கின்றன.

புதிய தமிழ்ப் படங்கள் திரையீடு எப்போது?

இந்தியாவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதனால் புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதிகளும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் திரையரங்குகள் அநேகமாக செப்டம்பர் அல்லது தீபாவளி தருணத்தில்தான் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னரே தமிழ்ப் படங்களின் திரையீடுகள் நிகழும். அதே நாளில் மலேசியாவிலும் தமிழ்ப் படங்கள் வழக்கம்போல் வெளியீடு காணும்.

உள்நாட்டுப் படங்களின் திரையீடும் இல்லை

மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சாஹ்ரின் அரிஸ் இது குறித்து கருத்துரைத்தார். “உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட இன்னும் நம்பிக்கைக் கொள்ளவில்லை. எதிர்பார்த்த வசூல் கிட்டாது என அவர்கள் அஞ்சுகின்றனர்” என சாஹ்ரின் அரிஸ் தெரிவித்ததாக பெர்னாமாவின் செய்தி தெரிவித்தது.

“இதுவரையில் “ரோ” (Roh) என்ற படம் ஒன்றே எதிர்வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திரையிடப்பட நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பரில் மேலும் 2 படங்கள் வெளியாகலாம். வழக்கமாக ஒரு மாதத்தில் சராசரியாக 6 உள்ளூர் படங்கள் திரையேறும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலகட்டத்தில் சில படங்களைத் தயாரிப்பாளர்கள் உள்ளூர் கட்டணம் செலுத்தும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு விற்றிருக்கிறார்கள் என்றும் சாஹ்ரின் குறிப்பிட்டார்.

பினாஸ் எனப்படும் தேசியத் திரைப்பட மேம்பாட்டு கழகத்திடமும் உள்ளூர் திரைப்பட நிறுவனங்கள் தங்களுக்கு சில சலுகைகளும் உதவிகளும் வழங்கப்பட வேண்டுமென பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் இன்னும் முறையான பதில் அறிவிப்புகள் பினாஸ் கழகத்திடம் இருந்து வெளியிடப்படவில்லை.

உள்ளூர் தமிழ்ப் படங்களின் நிலைமை என்ன?

இதற்கிடையில் அண்மைய ஆண்டுகளில் உள்ளூரில் தமிழ்ப்படத் தயாரிப்புகளும் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. சில படங்களின் தயாரிப்பு, படப்பிடிப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறைகளுக்கேற்ப படப்பிடிப்புகளை நடத்துவது சிரமம் என்பதால் படத் தயாரிப்புக் குழுவினர் இன்னும் படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்குத் தயங்குகின்றனர்.

மேலும் சில உள்ளூர் தமிழ்ப் படங்கள் தயாரிப்புப் பணிகள் முடிந்து திரையிடக் காத்திருக்கின்றன.

உள்ளூர் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும் பினாஸ் வாரியத்தில் தமிழ் மொழி உள்ளடக்கம் மற்றும் இந்திய சந்தைக்கான பிரதிநிதியாக இடம் பெற்றிருப்பவருமான ஆர்.டெனிஸ் குமாரும் (படம்) இந்த விவகாரம் குறித்து தனது கருத்துகளை வெளியிட்டார்.

மீண்டும் திரையரங்குகளைத் திறக்கும் முடிவு உள்ளூர் திரைப்படத் தொழிலுக்கு அரசாங்கம் நீட்டும் உதவிக் கரமாக கருத வேண்டும் என டெனிஸ் குமார் கூறினார்.

“வெடிகுண்டு பசங்க” போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்து வழங்கியவர் டெனிஸ் குமார். அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார்.

“உள்ளூர் திரைப்படத் தொழிலுக்கும் திரையரங்குகளுக்குமான கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் சுகாதார அமைச்சின் உத்தவரவுகளுக்கேற்ப செயல்படுத்தப்படுவதால் அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.

உள்ளூர் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மானியங்களுக்கான விண்ணப்பங்களைத் தற்போது பினாஸ் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.