பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக வன்முறை வெடித்தது. மக்களின் அன்றாட செலவினங்கள் எல்லையை மீறிச் சென்றதன் அதிருப்தியின் செயல்பாடே இப்போராட்டத்திறகான காரணம் எனக் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு, டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் மீதான வரியை குறைக்கக் கோரி, மஞ்சள் நிற உடையணிந்து போராட்டக்காரர்கள், மூன்று வாரங்களாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 1600 இடங்களில் போராட்டங்கள் நீடித்து வந்த நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள சாம்ஸ் எலிசீஸ் பகுதியில், பொதுமக்கள் கூடுவதற்கு காவல் படையினர் தடை விதித்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்கார்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதில் 20 காவல் படையினர் உள்பட 110 பேர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதைக் கருதி பிரான்சின் ஈபிள் கோபுரம் மற்றும் பிற சுற்றுலாத் தளங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது வாரமாக இப்போராட்டம் தொடரப்படும் என சமூக ஊடகங்களில் “Act IV” என்று போராட்டக்காரர்கள் பகிர்ந்து வருவதால், பிரான்ஸ் பிரதமர் எடுவர்ட் பிலிப், 89,000 காவல் படையினர் நாடு முழுவதும் நிறுத்தப்படுவார்கள் எனக் கூறினார்.