கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல், நாடு முழுமையிலும் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காரணம், நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் அணியினரை எதிர்த்து இந்து சங்கத்தின் மற்றொரு நீண்டகால சேவையாளர் இராமநாதன் கோவிந்தன் தலைமையிலான அணியினர் போட்டியில் குதித்திருப்பதுதான்!
தங்களை ‘தர்மயுத்தம் அணி’ என்ற அடையாளத்தோடு பிரகடனப்படுத்திக் கொண்டு தேர்தல் களத்தில் குதித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் இராமநாதன் அணியினர்.
இந்து சங்கத்தோடு தொடர்புடைய பலரும் இந்தப் போட்டி கடுமையான ஒன்றாக உருவாகியிருப்பதாகவும், சங்கத்தில் மாற்றம் தேவை என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாகவும் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கும் நேர்காணல்களில் ஏன் இந்தப் போட்டியில் குதிக்கிறேன் என்பது குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார் இராமநாதன்.
“இந்து சங்கத்தில் நீண்ட காலமாகத் தொடர்புடையவன் என்றாலும், கடந்த 8 ஆண்டுகளாக நான் சற்று ஒதுங்கியே இருந்தேன். இருப்பினும், இந்து சங்கத்தில் நடந்து கொண்டிருந்த சம்பவங்களை அணுக்கமாக கவனித்து வந்தேன். சில விவகாரங்கள் குறித்துக் கேள்விப்பட்டதும் நாமும் தலைமைத்துவ மாற்றத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இந்த சூழ்நிலையில்தான் இந்து சங்கத்தைச் சேர்ந்த பலரும் என்னைச் சந்தித்து தலைமைத்துவ மாற்றத்திற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் காரணமாக அனைவரின் ஆதரவோடும் நானே தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்தேன்” எனக் கூறுகிறார் இராமநாதன்.
சீ பீல்ட் விவகாரமும் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு
பொதுவாக கடந்த சில ஆண்டுகளாக மோகன் ஷான் தலைமைத்துவத்தில் இருந்த கால கட்டத்தில் இந்து சமய விவகாரங்களில் சங்கம் உறுதியான, தீவிரமான முடிவுகள் எடுக்கவில்லை என்பதும், ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கம் பாராட்டி அதன் காரணமாக, சில விவகாரங்களில் மெத்தனமாகச் செயல்பட்டது என்பதும் மோகன் ஷான் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டுகள்.
அதிலும் சீ பீல்ட் விவகாரம் இந்து சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அகற்ற மோகன் ஷான் பரிந்துரைக் கடிதம் வழங்கினார் என்பதும் அந்த ஆலய விவகாரத்தில் தீவிரமாகப் போராடவில்லை என்பதும் இராமநாதன் பகிரங்கமாக விடுத்திருக்கும் தேர்தல் பிரச்சாரக் குற்றச்சாட்டுகளாகும்.
ஒரு மிகப் பெரிய பன்னாட்டு வணிக நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இராமநாதன், நேரடியாகவும், சமூக ஊடகங்களின் வழியும் தீவிரமாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவரது முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
புதுமையான, முன்னேற்றகரமான பல திட்டங்களை முன்வைத்து தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர் இராமநாதன் அணியினர்.
நாட்டிலுள்ள இந்து மக்களுக்கு என பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவது என்பதும் இந்து சமயக் கல்லூரி ஒன்றை நிறுவுவது என்பதும் மதமாற்றப் பிரச்சனைகளைக் கையாளச் சிறப்புப் பணிக் குழு ஒன்றை அமைப்பதும் அத்தகையத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க சில!
துணை முதல்வர் இராமசாமியின் ஆதரவு
இந்து சங்கத்தில் மாற்றம் தேவை என்ற அறைகூவலோடு, இராமநாதன் அணியினருக்கு கைகொடுத்திருக்கும் மற்றொரு பிரபலம் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி!
தனக்கு யார்மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என்று கூறியிருக்கும் இராமசாமி எனினும், மே 9 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று இந்து சங்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் இந்து சங்கத்திற்கு அவசியம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவருமான இராமசாமியின் பகிரங்க அறைகூவலும், ஆதரவும் இராமநாதன் அணியினரின் பிரச்சாரத்திற்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என்றும் கருதப்படுகிறது.
-செல்லியல் தொகுப்பு