பெட்டாலிங் ஜெயா : பெரும் பரபரப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேர்தலில் நடப்புத் தலைவரும் நீண்டகாலமாக அந்த இயக்கத்தை வழிநடத்தி வந்தவருமான மோகன் ஷான் தோல்வியடைந்தார்.
சங்கத்தின் புதிய தலைவராக கணேசன் தங்கவேலு தேர்வுசெய்யப்பட்டார். பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 45ஆவது தேசிய ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய செயலவை பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
10 பதவிகளுக்கு 20 போட்டியிட்ட வேளையில், தேர்தலில் 1448 பேராளர்கள் வாக்களித்தனர்.
இத்தேர்தலில் கணேசன் தங்கவேலு அணியின் சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர்.
கணேசன் அணியினர் 900-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:
- டாக்டர் கோபி
- கணேசன் தங்கவேலு
- எஸ். கலைவாணி
- கணேஷ் பாபு
- ஆதிமூலம்
- எம். பாலகிருஷ்ணன்
- முனியாண்டி
- பெருமாள்
- சுந்தரி
- வேலாயுதம்
மலேசிய இந்து சங்கத்தின் மொத்த மத்திய செயலவையினரின் எண்ணிக்கை 27 ஆகும். இதில் பத்து பதவிகளுக்கு மட்டுமே சுழற்சி முறையில் தேர்தல் நடைபெற்றது.
மத்திய செயலவையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 10 பேர், ஏற்கெனவே உள்ள 17 பேருடன் இணைந்து புதிய தலைவராக கணேசன் தங்கவேலுவைத் தேர்ந்தெடுத்தனர்.
சங்கத்தின் துணைத் தலைவராக கணேஷ் பாபு, உதவித்தலைவர்களாக வேலாயுதம், சாந்தா, தலைமைச் செயலாளராக மாணிக்கவாசகம், துணைத் தலைமைச் செயலாளராக எஸ். அழகேந்திரன், பொருளாளராக முனியாண்டி, துணைப் பொருளாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டதாக புதிய தலைவர் கணேசன் தங்கவேலு அறிவித்தார்.