Home Photo News செல்லியல் பார்வை : மித்ராவுக்கு இந்து சங்கம் திருப்பிக் கொடுத்த 1.1. மில்லியன் – இழந்தது...

செல்லியல் பார்வை : மித்ராவுக்கு இந்து சங்கம் திருப்பிக் கொடுத்த 1.1. மில்லியன் – இழந்தது இந்திய சமூகம்!

1327
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய இந்து சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பவர் டத்தோ மோகன் ஷான் (படம்). மலேசிய இந்து ஆலயங்களுக்கு மித்ரா மூலம் இந்து சங்கத்திற்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியத்தை ஆலயங்களுக்கு முறையாகப் பங்கிட்டுக் கொடுக்க இயலாமல் மீண்டும் அந்தப் பணத்தை அரசாங்கத்திற்கே திருப்பிக் கொடுத்திருக்கும் விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் செய்தி அறிக்கையின்போது வழங்கிய விளக்கத்தில் மோகன் ஷான் இந்த விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

மலேசிய இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் 100 மில்லியன் ரிங்கிட்டை மலேசிய அரசாங்கம் ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட இலாகா மித்ரா ஆகும். முன்பு செடிக் என்ற பெயரில் பிரதமர் துறை அமைச்சின் கீழ் நேரடியாக செயல்பட்டது மித்ரா. தற்போது  ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு மித்ராவுக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து 4.2 மில்லியன் ரிங்கிட்டை மலேசிய இந்து சங்கம் பல இந்து ஆலயங்களுக்கான மேம்பாட்டு நிதியாகப் பெற்றது.

உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதற்காக இந்து சங்கத்திற்கு நமது பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.

“இதற்காக மொத்தம் 4.2 மில்லியன் ரிங்கிட்டை 1,934 ஆலயங்களின் பயன்பாட்டுக்காக மித்ரா ஒதுக்கியது. 310 ஆலயங்களுக்கு நேரடியாகத் தாங்களாகவே வழங்குவதாகக் கூறி 700,000 ரிங்கிட்டை மித்ராவே எடுத்துக் கொண்டது. எஞ்சிய 3.5 மில்லியன் ரிங்கிட் இந்து சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இதில் சுமார் 2.5  மில்லியன் ரிங்கிட் 1,158 ஆலயங்களுக்கு இந்து சங்கத்தால் பகிர்ந்து வழங்கப்பட்டது. எஞ்சிய 1.1 மில்லியன் திரும்ப மித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சங்கப் பதிவதிகாரியிடம் பதிவு செய்யப்படாத ஆலயங்களுக்கு மித்ரா நிதியை வழங்க முடியாது என்ற நிபந்தனையால் இந்தத் தொகை திரும்ப மித்ராவிடமே ஒப்படைக்கப்பட்டது” என  மோகன் ஷான் விளக்கம் தந்திருக்கிறார்.

எழுகின்ற கேள்விகள் என்ன?

இங்குதான் பல கேள்விகள் எழுகின்றன.

ஆலயங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விண்ணப்பத்தைப் பெறும்போது பரிந்துரைக்கப்படும் ஆலயங்கள் சங்கப் பதிவகத்தில் பதிந்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மித்ரா விதிக்கவில்லையா?

இந்து சங்கம் மானியத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, பல ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த இயக்கத்திற்கு பதிவு பெற்ற ஆலயங்களுக்கு மட்டுமே அரசாங்க மானியம் வழங்கப்படும் என்ற நிபந்தனை பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது தெரியாதா?

மித்ரா ஒரு தொகையை இந்து சங்கத்திற்கென ஒதுக்கி இந்து சங்கமே எந்த ஆலயங்களுக்கு இந்தப் பணத்தை வழங்குவது என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியதா?

700,000 ரிங்கிட்டை 310 ஆலயங்களுக்கு வழங்குவதற்காக எடுத்துக் கொண்ட மித்ரா அந்த 310 ஆலயங்களும் முறையாக சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டவை என்பதை உறுதி செய்ததா?

இந்து சங்கத்திற்கு வழங்கப்பட்ட 3.5 மில்லியன் ரிங்கிட் மொத்தமாகக் கொடுக்கப்பட்டு எந்த ஆலயங்களுக்கு வழங்குவது என்பதைத் தேர்வு செய்யும் உரிமை இந்து சங்கத்திற்கே வழங்கப்பட்டதா?

அல்லது அந்த 3.5 மில்லியன் ரிங்கிட் தொகையை குறிப்பிட்ட ஆலயங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்பதை மித்ராவே நிர்ணயம் செய்ததா?

அப்படி நிர்ணயம் செய்திருந்தால், அந்தத் தொகையைப் பெறும் ஆலயங்களின் பட்டியலைப் பெறும்போது, அந்த ஆலயங்களில் பல, சங்கப் பதிவகத்திடம் முறையாகப் பதிவு பெறாதவை என்பது மித்ராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையா?

இழந்தது இந்திய சமூகம்தான்!

இந்தப் பிரச்சனையில் இந்து சங்கம் தவறிழைத்ததா, அல்லது மித்ரா தவறிழைத்ததா என்ற விவாதம் நமக்குத் தேவையில்லை. யாரையும் குறை கூறும் நோக்கமும் நமக்கில்லை.

இதனால் இந்திய சமுதாயம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை அனைத்துத் தரப்புகளும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமும் கூட!

அரசாங்கம் எங்களுக்குப் போதிய உதவிகள் செய்வதில்லை என இந்திய சமூகத்தில் குறிப்பாக, இந்து ஆலயங்களுக்கு போதிய உதவிகள் கிடைப்பதில்லை என்ற குறைகூறல்கள் அடிக்கடி எழுகின்றன.

அதிலும் தற்போது கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் பல ஆலயங்கள் பக்தர்களின் வருகையின்றி சிரமத்தில் இயங்குகின்றன. அதனால் ஆலயங்களைப் பராமரிப்பதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் அறைகூவல்கள் எழுந்திருக்கின்றன.

ஆனால், அதே சமயத்தில் ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1.1 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்படாமல் அரசாங்கத்திற்கே திரும்பவும் அனுப்பப்பட்ட அவலமும் நிகழ்ந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மக்களுக்காகவும், இந்திய சமுதாயத்திற்காகவும் வழங்கப்படும் பணத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள், அதற்கான முயற்சிகளை எடுக்கக்கூடிய திறனும் ஆற்றலும் இல்லாதவர்களால் இந்திய சமூகம்தான் இழப்புகளைச் சந்தித்திருக்கிறது.

இந்திய சமூகம் இழந்தது எப்படி?

உதாரணத்திற்கு, 2020-இல் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டில் இந்து சங்கம் திருப்பி அனுப்பியிருக்கும் 1 மில்லியன் பணத்தால் இந்திய சமூகத்திற்கு உண்மையிலேயே 99 மில்லியன்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

“அப்படித் திரும்ப அனுப்பப்படும் அந்தப் பணம் அப்படியே மீண்டும் அரசாங்க நிதிக் கையிருப்பில் சேர்க்கப்பட்டு விடும். மீண்டும் அதனை இந்திய சமூகத்திற்கெனப் பயன்படுத்த முடியாது. இதனால் 2021-இல் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்படும் 100 மில்லியன் ரிங்கிட் 101 மில்லியனாக உயர்ந்து விடாது. மீண்டும் 2021-க்கு என்று ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் தொகையை மட்டுமே மித்ரா பயன்படுத்த முடியும். எனவே இதனால் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்குத்தான் இழப்பு” என்று கூறுகிறார் அரசாங்க மானிய ஒதுக்கீடுகள், நிதியமைச்சின் செயல்பாடுகள் ஆகியவற்றை நன்கு அறிந்த- பெயர் தெரிவிக்க விரும்பாத – முன்னாள் அரசாங்க அதிகாரி ஒருவர்.

இதுபோன்று இன்னும் எத்தனை இயக்கங்கள் இவ்வாறு பணத்தை மித்ராவுக்கு பயன்படுத்தாமல் திருப்பிக் கொடுத்திருக்கின்றன என்பது தெரியவில்லை. அவ்வாறு எவ்வளவு பணம் தங்களுக்குத் திரும்பி வந்திருக்கின்றது என்பது குறித்து மித்ராவும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற அறைகூவல்கள் எழுந்திருக்கின்றன.

அப்போதுதான் இந்திய சமுதாயத்திற்கு மித்ரா மூலம் உண்மையில் கடந்த ஆண்டில் கிடைத்தது எவ்வளவு என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, இந்து சங்கம் அந்த 1.1 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பிக் கொடுத்ததுபோல் வேறு சில இயக்கங்களும் நிபந்தனைகள் காரணமாக, பயன்படுத்தாமல் திரும்பவும் மித்ராவிடமே மானியத்தை ஒப்படைத்துவிட்டன என வைத்துக் கொள்வோம். மித்ராவிடம் திரும்பவும் வழங்கப்பட்ட அந்த மொத்தத் தொகை 5 மில்லியன் என வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பார்த்தால் இந்திய சமூகத்திற்கு 2020-இல் ஒதுக்கப்பட்ட நிதி வேண்டுமானால் 100 மில்லியனாக இருக்கலாம் – ஆனால் கிடைத்தது, பயன்படுத்திக் கொள்ளப்பட்டது என்னவோ 95 மில்லியன் ரிங்கிட்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவேதான், மித்ராவுக்கு மொத்தம் திரும்ப அனுப்பப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதை மித்ராவே முன்வந்து இந்திய சமூகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

பணத்தைத் திரும்ப மித்ராவுக்கு அனுப்பாமல் மற்ற ஆலயங்களுக்குத் தர முடியாதா?

இப்போதும் ஒன்றும் காலம் கடந்து விடவில்லை.

இந்து சங்கம் திரும்ப அனுப்பிய 1.1 மில்லியன் தொகை மித்ராவின் கணக்கில் வைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தை அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கு அனுப்பாமல் மித்ராவே மீண்டும் பயன்படுத்த முடியும் என்றால், அந்தப் பணத்தை மறுசுழற்சி திட்டம் போன்று தேவைப்படும் மற்ற ஆலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட முடியும்.

இந்து சங்கத்திடம் எஞ்சிய அந்தப் பணத்தை தேவைப்படும் மற்ற ஆலயங்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் மித்ராவுக்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பதையும் மித்ராவே முன்வந்து விளக்க வேண்டும்.

அதுவும் இப்போதைய கொவிட்-19 நெருக்கடியில் மீண்டும் மித்ரா அந்தப் பணத்தை இந்திய சமூகத்திற்கு பயனுள்ள வழியில் தேவைப்படும் ஆலயங்களுக்கு வழங்கலாம்.

அவ்வாறு முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதா என்பதை விளக்க வேண்டிய கடமையும் இந்து சங்கத்திற்கும் மோகன் ஷான்னுக்கும் மித்ராவுக்கும் இருக்கிறது.

மித்ராவுக்கு அரசாங்கம் ஆண்டு தோறும் வழங்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் என்பது நீண்ட நெடுங்காலமாக இந்திய சமுதாயமும், அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த மஇகாவும், ஏன் பல எதிர்க்கட்சிகளும் கூட இணைந்து  போராடிப் பெற்ற உரிமை.

தேசிய முன்னணி ஆட்சிக்குப் பின்னர் வந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியான நம்பிக்கைக் கூட்டணியும் இந்தத் தொகையைத் தொடர்ந்து இந்திய சமூகத்திற்கு  ஒதுக்கீடு செய்தது.

அப்படி பல போராட்டங்களுக்கு இடையில் இந்திய சமூகம் பெற்ற நிதி ஒதுக்கீடுதான் மித்ராவுக்கான 100 மில்லியன் ரிங்கிட்.

ஒருசில இயக்கங்களின் செயலற்ற – தன்மையாலும், ஒருசில அரசாங்க அதிகாரிகளின் தவறான அணுகுமுறையாலும்,

இந்திய சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய மில்லியன் கணக்கான மானியங்கள் ஒதுக்கப்பட்டும் – பயன்படுத்தப்பட முடியாமல் திரும்ப அனுப்பப்படும் அவலம் – மீண்டும் இந்திய சமூகத்திற்கு நேரக் கூடாது!

-இரா.முத்தரசன்