Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்!

திரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்!

1225
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 75 வயது நாடக நடிகராக, முதியவர் வேடத்தில், வித்தியாசமான ஒப்பனையுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியிருக்கும் ‘சீதக்காதி’ அவரது நாயக நடிப்பை எதிர்பார்த்து திரையரங்கை நாடி வரும் அவரது இரசிகர்களுக்கு நிச்சயம் பெரும் ஏமாற்றத்தைத் தரும்.

காரணம், முதல் அரை மணி நேரத்திற்கு மட்டும் வரும் விஜய் சேதுபதி ஆரம்ப காலம் முதல் வேறு வேறு நாடக வேடங்களில் வருகிறார். 1940-ஆம் ஆண்டுகளில் தொடங்கி நடப்பு காலம் வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடித்துக் காட்ட, அதைப் பார்க்கும் இரசிகர் கூட்டம் மட்டும் குறைந்து கொண்டே போவது நெருடலும் நெகிழ்ச்சியுமான காட்சிகள். எல்லாம் இரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், அந்த ஔரங்கசீப் வேடக் காட்சியும், அதற்கான வசனங்களும் சற்றே நீ…….ளம்.

அதற்கேற்றபடி, படத்தின் நீளம் 15 நிமிடங்களுக்கு தற்போது குறைக்கப்பட்டு மீண்டும் தமிழகத் திரையரங்குகளில் சீதக்காதி திரையிடப்படுகிறது என இன்று (டிசம்பர் 24) வெளிவந்திருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

தன் பேரனுக்கு ஏற்பட்ட ஓர் உடல்நலக் கோளாறுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் பணத்தை குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்க, அதற்குள்ளாக திடீரென இறந்து போகிறார் அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி.

அதோடு படம் பார்க்கும் இரசிகர்களாகிய நாமும் தொய்வடைந்து விடுகிறோம்.

மரணத்தைக் கடந்து வாழும் நடிப்புக் கலைஞன்

ஆனால், அதற்குப் பிறகுதான் விஜய் சேதுபதி இல்லாமலேயே படத்தை இன்னொரு திசையில் செலுத்தி தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். சில காட்சிகள் சுவாரசியம் என்றாலும், அரை மணி நேரத்திற்குள் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை முடித்து விடுவதால் இரசிகனின் சுவாரசியமும் குன்றி விடுகிறது.

காலமெல்லாம் நடிப்பை மேடைகளில் தெய்வமாகப் போற்றி வளர்த்த நடிகன் இறந்தாலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகனின் நடிப்பில் இறந்த பின்னரும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறான் என்ற தத்துவத்தைச் சொல்ல இயக்குநர் முயற்சி செய்வதுதான் மீதிக் கதை.

இறந்த பின்னர், வாழும் காலத்தில் இல்லாத அளவுக்கு புகழ்பெறும் அய்யா ஆதிமூலம், அதன்மூலம் வருமானத்தையும் பெறுகிறார். குடும்பம் சீரடைகிறது. பேரன் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடிக்கிறான். அதுதான் ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்ற முதுமொழியை நினைவுபடுத்தும் சீதக்காதி படம்.

அய்யா ஆதிமூலத்திற்கு எந்த கதாபாத்திரம் பிடிக்கும், எத்தகைய கதைகள் பிடிக்கும் என நாடக நிர்வாகியாக வரும் மௌலி முடிவு செய்கிறார். அதற்கேற்ப ஒரு சாதாரண நடிகன் திடீரென நடிப்பில் வெளுத்து வாங்குவதும், பின்னர் அதே நடிகன் பாதை மாறும் போதும், மனதில் களங்கம் கொள்ளும் அதே நடிப்பு வராமல் சொதப்புவதும், வித்தியாசம்தான். ஆனால் அதற்கென, ஒரு நடிகனுக்கு நடிப்பு வரவில்லை என்பதைக் காட்ட பத்து முறை ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் காட்டுவதும் அதைப் படமாக்க இயக்குநர் கஷ்டப்படுவதும் போரடிக்கிறது.

படத்தின் இரண்டாவது பாதியில் தயாரிப்பாளராக உள்ளே நுழைந்து பின்னர் தானே நடிகராக மாறும் சுனில் ரெட்டி நடிப்பில் கலக்குகிறார். நடிகர் வைபவ்வின் அண்ணன். இவரும் இனி ஒரு சுற்று தமிழ்ப் படங்களில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ் அவர்களாகவே ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

நடிகைகள் ரம்யா நம்பீசனும் பார்வதி நாயரும் அதேபோன்று நடிகைகளாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் நீதிபதியாக கொஞ்ச நேரமே வந்தாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சீதக்காதி மொத்தத்தில் சுவாரசியமான, வித்தியாசமான, இரசிக்கும்படியான படம்தான்.

ஆனால், படம் வெளிவருவதற்கு முன்னால், விஜய் சேதுபதியின் வேடத்திற்கும் அவரது ஒப்பனைக்கும், தோற்றத்திற்கும் அவ்வளவு பெரிய விளம்பரமும், விவரிப்புகளையும் தந்து விட்டு, அந்தக் கதாபாத்திரம் அரை மணி நேரமே வருவது போலவும், அதிலும் இறந்து விடுவது போலவும் காட்டியிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை. திரைக்கதையை சற்றே மாற்றியமைத்து, விஜய் சேதுபதியின் நடிப்புக்குத் தீனி போடும் வகையில், படம் முழுக்க இடையிடையே அவர் வருவது போல் காட்டியிருந்தால், இரசிகனும் திருப்தியடைந்திருப்பான். விஜய் சேதுபதியின் வெற்றிப் படங்களில் ஒன்றாக சீதக்காதி நிலை பெற்றிருக்கும்.

-இரா.முத்தரசன்