ஜோகூர் பாரு: பூகம்பங்கள், ஆழிப் பேரலைகள் மற்றும் எரிமலைகள் பற்றிய ஆய்வுகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நிலநடுக்கவியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் எடி டோனிசாம் கூறினார்.
சமீபத்தில், அண்டை நாடுகளில் உள்ள எரிமலைகள் மீண்டும் குமுறத் தொடங்கியதாலும், கடந்த 23-ஆம் தேதி (சனிக்கிழமை), அனாக் கிராகாதவ் எரிமலை வெடித்து, அதன் காரணமாக ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதன் காரணமாகவும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு, அனாக் கிராகாதவ் எரிமலை வெடித்து, 30,000 உயிர்கள் பறிபோயின. இந்தச் சம்பவமானது, மலேசியா உட்பட, இந்தோனிசியாவின் அருகாமையில் உள்ள இதரப் பகுதிகளையும் பாதித்தது.
“இந்த சூழ்நிலையைப் பார்க்கும் போது, நமக்கு ஆழிப் பேரலைகளினால் மட்டும் ஆபத்துகள் நிகழவில்லை, ஆனால், எரிமலைகள் வெடிப்பதாலும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன”, என அவர் கூறினார்.
அவரை பொறுத்தமட்டில், நிலநடுக்கவியல் துறையில்நிபுணத்துவம் இருக்குமாயின், ஆழிப் பேரலைகள் ஏற்படும் போது, ஆரம்ப எச்சரிக்கைகள் விடுப்பது மட்டுமல்லாமல், பூகம்பங்களினால் ஏற்படும் பேரழிவுகளைச் சமாளிக்கவும் நமக்கு உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார்.
ஒரு வேளை, மீண்டும் இவ்வாறான சம்பவம் ஏற்பட்டால், 2004 –ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆழிப் பேரலையை விட மோசமான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அவர் எச்சரித்தார்.