அமெரிக்கா: மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள், குறிப்பாக குவாட்டமாலா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க எல்லையை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்நாட்டு அரசின் தடுப்புக் காவலில் இருந்த குவாட்டமாலாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானான்.
தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை மற்றும் வன்முறைகளிலிருந்து தப்பித்து அமெரிக்காவில் அவர்கள் அடைக்கலம் தேடி வருகின்றனர்.
இதே மாதிரியான சம்பவத்தில் ஏழு வயது சிறுமி இந்த மாதத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது. இறந்த இந்த சிறுமி, கல்லீரல் செயல் இழந்து போனதால் மரணமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அச்சிறுமி உடலில் நீர்ச்சத்துகளை இழந்ததால்தான் உயிரிழந்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருந்தது.
தொடர் வாந்தியால் அவதிப்பட்டு வந்த சிறுவன் ஒருவன் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்ததாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.
இவ்வாறாக சிறு குழந்தைகளின் இறப்பிற்கு உண்மையான காரணங்கள் என்னவாக இருக்கும் எனும் கேள்வி பலரது எண்ணத்தில் எழுந்து வருகிறது. அமெரிக்க நாட்டிற்குள் அனுமதியின்றி, நுழைய முற்பட்டால் கைது, வழக்கு மற்றும் நாடு கடத்தல் போன்றவற்றை சந்திக்க நேரிடும் என அந்நாடு எச்சரித்திருந்தது.