தோக்கியோ : இன்று பிறந்திருக்கின்ற புத்தாண்டு ஜப்பானுக்கு சோகமான தொடக்கத்தைத் தந்திருக்கிறது.
ஜப்பானின் மேற்குக் கரையோரத்தில் 7.6 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுள்ளது. 1 மீட்டர் உயரத்திலான கடலலைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இன்னும் மிகப்பெரிய சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அணுஉலை மையங்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அணு உலைகளில் இதுவரை பாதிப்புகள் இல்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷிகாவா என்ற இடத்தில் கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகளும், தோக்கியோவில் அதிர்வுகளால் கட்டடங்கள் ஆட்டங் கண்ட காட்சிகளும் ஜப்பானிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் காட்டப்பட்டன.
கடந்த 2011, மார்ச் 11-ஆம் வடகிழக்கு ஜப்பானை உலுக்கிய சுனாமி தாக்குதலால் சுமார் 20 ஆயிரம் பேர் மரணமடைந்தனர். புக்குஷிமா அணு உலையும் பாதிக்கப்பட்டு அணுக்கசிவு ஏற்பட்டது. பல நகரங்கள் தரைமட்டமாயின.