கோலாலம்பூர் – 2018-ஆம் ஆண்டு நிறைவடைந்து, நம்மைக் கடந்து செல்லும் இந்த காலகட்டத்தில் கடந்த சில நாட்களாக மின்னல் பண்பலையில் (எப்.எம்) நடந்து முடிந்த ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தனது காலைக்கதிர் நிகழ்ச்சியின் வாயிலாக தொகுத்து வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், இன்று வெள்ளிக்கிழமை நேரலையாக ஒலிபரப்பப்பட்ட காலைக் கதிர் நிகழ்ச்சியில், செல்லியல் நிருவாக ஆசிரியர் கலந்து கொண்டு 2018-ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
இரா.முத்தரசனுடன் காலைக்கதிர் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்கள் ரவீன், சுகன்யா இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தனர்.
2018-ஆம் ஆண்டில் சில நாடுகளில் நிகழ்ந்த தலைமைத்துவ மாற்றங்கள், முக்கிய அரசியல் சம்பவங்கள், முக்கியத் தலைவர்களின் மறைவுகள், தமிழ் ஆளுமைகளின் மறைவுகள், மற்றும் விளையாட்டுத் துறை, அறிவியல், கலையுலகம் போன்ற துறைகளில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் ஆகியவை குறித்த விரிவான விவரங்களை இரா.முத்தரசனும், அறிவிப்பாளர்கள் ரவீனும், சுகன்யாவும் மின்னல் பண்பலை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக, உலக மக்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒருசேர உலுக்கிய – அதிர்ச்சிக்குள்ளாக்கிய – 2018-இன் ஒரே சம்பவமாக சவுதி அரேபியப் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை முத்தரசன் குறிப்பிட்டார்.
ஒரு பத்திரிக்கையாளர் தனது செயல்பாட்டில் எதிர்நோக்கும் அபாயம் – அதிகார வர்க்கத்தை எதிர்த்தால் கிடைக்கக் கூடிய பரிசு – ஒரு நாட்டின் அதிகாரத்துவ தூதரகத்திலேயே இவ்வாறு ஒரு பத்திரிக்கையாளன் கொல்லப்படுவானா என்ற கேள்வி – அதிலும் இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்படுவானா என்ற அதிர்ச்சி – உலகத்துக்கே ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் போதிக்கும் அமெரிக்காவின் அதிபர் போன்றவர்களே சவுதியின் நல்லுறவுக்காக மௌனம் காக்கும் அவலம் -இதுவரையில் கஷோகியின் இறந்த உடல் கூடக் கிடைக்காத சோகம் –
இப்படியாக சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு அம்சங்களை ஒருசேர வெளிப்படும் ஒரே சம்பவமாக கஷோகியின் கொலை திகழ்கிறது என முத்தரசன் காலைக் கதிர் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டும் இதே காலகட்டத்தில் மின்னல் பண்பலையில் 2017-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை இரா.முத்தரசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.