கோலாலம்பூர்: 2021-ஆம் ஆண்டு முதல் தலைநகரில் உயரமான கட்டிட கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்படலாம் என கோலாலம்பூர் மாநகராட்சித் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் அகமட் டாலான் கூறினார். அடர்த்தியாக ஆங்காங்கே கட்டப்படும் உயரமான கட்டிடங்களால் கோலாலம்பூரின் இயற்கைத் தன்மை அழிந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்து விட்டது என அவர் கூறினார்.
2040 கோலாலம்பூர் திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
2020 நகர திட்டம், 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் வேளையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் மற்றும் கோலாலம்பூரின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்து, அடுத்த இரண்டு வருடங்களில் கோலாலம்பூரில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழிமுறைகளை விவாதிக்க உள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக சாலை பராமரிப்பு, திடீர் வெள்ளம் மற்றும் அதிகமான கட்டுமான வளர்ச்சி போன்ற விவகாரங்கள் அதில் பேசப்படும் என்றார்.
உயரமான கட்டடங்களை கட்டுவதைத் தவிர்த்தால், அதிகமான சாலை நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும், கோ-கேஎல் (Go-KL) இலவச பேருந்து சேவையை பிப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.