கோலாலம்பூர்: ‘ஓன் பெல்ட், ஓன் ரோட்’ எனும் சாலை இணைப்புத் திட்டத்தினை நடைமுறைபடுத்தினால், அதற்கு மாற்றாக, 1எம்டிபி விவகாரத்திலிருந்து நஜிப்பை விடுவிப்பதற்கு சீன அரசாங்கம் உதவிப் புரியும் என அறிவித்திருந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி நிறுவனத்தின் நிருபர்களான, தோம் ரைட் மற்றும் பிரட்லி ஹோப் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
2016-ஆம் ஆண்டு இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனை செயல்படுத்தும் வகையில், 1எம்டிபி குறித்த தகவலை வெளியிடும் தரப்பினரைக் கண்டறியும் நோக்கில், ஹாங்காங்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் நிருபர்களின் வீட்டில், உளவு சாதனங்களைப் பொறுத்த சீனா உதவியதாக அது கூறியது.
மேலும், அமெரிக்கா மற்றும் இதர நாடுகள், 1எம்டிபி நிதியில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனை, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மற்றும் அவரது அதிகாரிகள் செய்திருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, தனது அதிகாரத்தைக் கொண்டு, எந்தவொரு வழக்கும் தொடுக்காதபடி பார்த்துக் கொள்வதாக சீனா குறிப்பிட்டுள்ளதாக, நிகழ்ச்சி குறிப்பொன்று கூறுவதை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியது.
சீனாவிற்கு சாலை இணைப்புத் திட்டத்தை வழங்குவதோடு மட்டும் பேச்சு வார்த்தைகள் நின்றுவிடாமல், மலேசியத் துறைமுகங்களில் சீனக் கடற்படை ஒதுங்கவும் நஜிப் அனுமதி வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.