பெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்தினரை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும் வகையில் சீன அரசாங்கம் மேலும் ஒரு செய்தியை அறிவித்துள்ளது.
இன்னும், 5 ஆண்டுகளில் சீனாவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் முழுமையாக சீன கலாசாரத்துக்கு மாறிவிட வேண்டும் எனும் புதிய சட்டத்தினை சீனா உருவாக்கியுள்ளதாக, சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இப்புதிய சட்டத்தின் படி, ஹிஜாப் அணிவது, இஸ்லாமிய உடைகள் அணிவது, தாடி வளர்ப்பது மற்றும் மதராசாக்களில் இஸ்லாமிய பாடங்களைப் படிப்பது குற்றமாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
சீனாவில் தற்போது, அனைத்து விவகாரங்களிலும் சீனமயமாக்கல் திட்டமானது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், பிற இன, மத மக்களும், சீனாவின் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் இந்தப் புதியச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2 கோடி சீன இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இந்நாட்டில், உய்குர் பிரிவு இஸ்லாமிய மக்கள் தீவிர மதப்பற்றுக் கொண்டவர்களாகவும், பிரிவினைவாதிகளாகவும் சீன அரசு கருதுகிறது. ஆகவே, முதலில் அவர்களை இந்த விவகாரத்தில் மாற்ற வேண்டும் எனக் கருதி அந்நாடு இச்சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.