கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளரை, அக்கூட்டணி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 10) அறிவிக்கும் என அம்னோ ஒன்லைன் இணையப் பக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணி வருகிற ஜனவரி 26—ஆம் தேதி, யாரைக் களத்தில் இறக்கும் எனும் கேள்விகள் எழுந்த வண்ணமாக உள்ளன.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சி. சிவராஜின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் ஜனவரி 26-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
கடந்த வார இறுதியில், முன்னாள் துணை அமைச்சரான, எம்.கேவியஸ் கேமரன் மலை இடைத் தேர்தலில் தாம் களம் இறங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், மஇகா தலைமைச் செயலாளர் எஸ். வேள்பாரி, இந்த இடைத் தேர்தலில் அம்னோ இத்தொகுதியில் போட்டியிடக் கேட்டுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம். மனோகரன் போட்டியிடுவார் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 4) அறிவித்தார்.