கோலாலம்பூர்: கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து, பகாங் மாநில ஜசெக கட்சியின் துணைத் தலைவர் எம். மனோகரன் போட்டியிடுவார் என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.
14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட மனோகரன், கேமரன் மலை வாக்காளர்களின் ஆதரவை பெற்று இந்த இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என மகாதீர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“எங்களுக்கு எதிராக யார் போட்டியிட போகிறார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் எவராக இருந்தாலும் அவருடன் போட்டியிட்டு வெல்ல முடியும்” என்று செய்தியாளர்களிடம் பிரதமர் இன்று தெரிவித்தார்.
14- வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணிக் கட்சியின் வேட்பாளர் சி. சிவராஜ், 1954 தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் என, கடந்த ஆண்டு, ஜூன் 4-ஆம் தேதி மனோகரன் தேர்தல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நீதிமன்றம், கேமரன் மலையில் சிவராஜின் வெற்றியை இரத்து செய்து, அத்தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என உத்தரவிட்டது.
கேமரன் மலை இடைத்தேர்தல் வருகிற ஜனவரி 26-ம் தேதி நடத்தப்படும் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.