கோல திரெங்கானு: பாபுக் வெப்பமண்டல புயலின் காரணமாக பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்தின் கடல்சார் எண்ணெய் கிணறை பெரிய அளவிலான அலைகள் தாக்கியதால், அதன் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி, அந்நிறுவனத்தின் அவசரநிலைக் குழு நேற்று முடுக்கி விடப்பட்டது.
நிலைமை சமாளிக்கக்கூடியதாக இருந்ததாகவும், அதன் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த ஆபத்தான சூழ்நிலையினால்,நேற்று நிலப்பகுதிக்கு திரும்ப இருந்த தொழிலாளர்கள், மேடையிலேயே இருக்கும்படியாக ஆனது என அது தெரிவித்தது.
இதற்கிடையே, பெர்லிஸ், கெடா, பினாங்கு, மற்றும் பேராக் மாநிலங்களில் பாபுக் புயலால் கடுமையான மழை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களில் ஜனவரி 4-ஆம் தேதி வரையிலும் கடுமையான மழைத் தொடரும் எனவும் மலேசிய வானிலை திணைக்களம் (MetMalaysia) நேற்று அறிவித்திருந்தது.