கோலதிரெங்கானு: பத்து புருக் சட்டமன்ற உறுப்பினரும், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மகனுமான கலீல் அப்துல் ஹாடி, திரெங்கானு மாநிலத்தின் புதிய நான்கு ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.
இங்குள்ள விஸ்மா தாருல் ஈமானில் நடைபெற்ற மாநில ஆட்சிக் குழுவின் முதல் கூட்டத்திற்கு மந்திரி பெசார் அகமட் சம்சுரி மொக்தார் தலைமை தாங்கினார்.
நடந்து முடிந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஸ்-பெரிக்காத்தான் கூட்டணி அபார வெற்றி பெற்ற மாநிலம் திரெங்கானு. அந்த மாநிலத்தின் 32 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து பாஸ் உதவித் தலைவர்களில் ஒருவரான அகமட் சம்சுரி மொக்தார் இரண்டாவது தவணைக்கு திரெங்கானு மந்திரி பெசாராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
53 வயதான சம்சுரி ரூ ரெண்டாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராவார். இன்று பிற்பகல் திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிசான் சைனால் அபிடின் முன்னிலையில் பிற்பகலில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
2018-இல் திரெங்கானு மாநிலத்தை பாஸ் கைப்பற்றியதைத் தொடர்ந்து சம்சுரி மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
2008 முதல் 2018 வரை பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கின் அரசியல் செயலாளராக சம்சுரி பணியாற்றினார்.
சம்சுரி மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆய்வுத் துறையின் முன்னாள் தலைவராவார். பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக் கழகத்தில் இயந்திரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர்.
விண்வெளித் துறையில் அவருக்கிருந்த கல்வியறிவு, அனுபவம் ஆகிய காரணங்களால் மாஸ் 370 விமானம் காணாமல் போனபோது ஊடகங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.
இன்றைய பதவியேற்பு சடங்கின்போது திரெங்கானு மாநிலத்திற்கான 10 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.