புத்ராஜெயா: உலகெங்கிலும் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 21) ‘தாய்மொழி நாள்’ கொண்டாடப்பட இருக்கும் வேளையில், மலேசிய மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘தாய்மொழி நாள்’ வாழ்த்துகளை பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி தெரிவித்துக் கொண்டார்.
உலகில் ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்றாலும் தன்னுடைய தாய்மொழியைப் போற்றுவதிலும் பேசுவதிலும்தான் பெருமைக் கொள்ள வேண்டும். இன்றைய அவசர உலகில் இரு வாரங்களுக்கு ஒரு மொழி வீதம் அழிந்து வருவதாக யுனெஸ்கோ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதனால்தான் அனைவருக்கும் தாய்மொழி மீது பற்றும் விழிப்புணர்வும் ஏற்படுவதற்காக, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி உலக அளவில் தாய்மொழி தினமாக ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு 1999-இல் பிரகடனம் செய்ததுள்ளது.
மலேசிய மக்களிடம் தாய்மொழி குறித்த விழிப்புணர்வு இயல்பாகவே இருக்கிறது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அண்மைய ஆண்டுகளில் தாய்மொழி நாளைக் கொண்டாடி தங்களின் தாய்மொழிப்பற்றை மேலும் வளர்த்து வருகின்றனர். இது பாராட்டுக்குரியது என அமைச்சர் தனது தாய்மொழி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.