சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.40 மணி நிலவரம்) கடந்த சில நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த அதிமுக – தேமுதிக இடையிலான தேர்தல் உடன்பாடு சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இன்று இருதரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டின்படி தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவாகியுள்ளது.
அதிமுக சார்பில் தமிழக முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ் பன்னீர் செல்வமும் கையெழுத்திட்டனர்.
தேமுதிக சார்பாக அதன் தலைவர் விஜயகாந்த் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் காணப்பட்ட விஜயகாந்துடன் அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிலுவையில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும்போது அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.
தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், இறுதிக் கட்டமாக அதிமுக-தேமுதிக தேர்தல் உடன்பாட்டைக் கண்டுள்ளது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.