கோலாலம்பூர் – ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அண்மையில் வெளியிட்ட தனது பரப்புரை ஏட்டில் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ்மொழி தவறாக இடம் பெற்றிருப்பது பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
எவ்வளவோ செலவு செய்து இத்தகைய பரப்புரை ஏட்டைத் தமிழில் கொண்டுவந்திருப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில், அதன் உள்ளடக்கங்களை பரிசீலிக்கவும், திருத்தவும், தமிழறிந்த ஒருவர் கூடவா இந்த ஏட்டைத் தயாரித்தவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபோன்ற தவறுகள், கோளாறுகள் – நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைச் சீர்குலைக்கிறது என்பதை நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் உணர வேண்டும்.
நம்பிக்கைக் கூட்டணி 14-வது பொதுத் தேர்தல் காலத்தில் இந்திய சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் முறையாக நிறைவேற்றவில்லை என இந்திய சமூகத்தில் பரவலான குறைகூறல்கள் நிலவிவரும் வேளையில், இதுபோன்ற தமிழ்க் கொலைகள் நம்பிக்கைக் கூட்டணியின் பெயரை மேலும் சிதைக்கும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.