Home வணிகம்/தொழில் நுட்பம் “கல்வியிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்குவோம்” – கோபாலகிருஷ்ணனின் புத்தாண்டு செய்தி

“கல்வியிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்குவோம்” – கோபாலகிருஷ்ணனின் புத்தாண்டு செய்தி

1103
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரை மாதம் வரவேற்கப்படுகிறது. சித்திரை மாதம் பிறந்ததுமே ‘இளவேனிற்காலம்’ எனும் வசந்த காலம் தொடங்குகிறது. அதுபோல் மலேசிய நாட்டு இந்தியர்களின் வாழ்விலும் வசந்தகாலம் மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்று விகாரி சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியாவிலுள்ள இந்துக்களுக்கு தமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் தேசிய தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.

“விகாரி” ஆண்டு இந்து புத்தாண்டைக் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் புத்துணர்ச்சி, புதிய சிந்தனை, ஐக்கியம், சமயம், சமூகம், கலாச்சாரம், பண்பாடு, வியாபாரத்தில் அமோக வெற்றி போன்றவற்றை எடுத்துக் காட்டும் வகையில் இந்நாள் அமைய வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்த கோபாலகிருஷ்ணன், “நல்லெண்ணம், நல்லுறவு, அன்பு, விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் சித்திரை திருநாளில், புதிய முயற்சிகளில் களம் இறங்கி வெற்றி காண்போம்” எனவும் வலியுறுத்தினார்.

“நம் நாட்டில் இந்தியர்களின் மக்கள் தொகை விழுக்காடு 7% ஆகும். குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, சீக்கிய வம்சாவளியினர் என்னும் வேறுபாடுகளைக் களைந்து, எல்லா நிலையிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் மிகப் பெரிய உந்து சத்தியாகத் திகழ வேண்டும் என்பதே எனது ஆசையாகும். வர்த்தகத்தில் இந்தியர்கள் மேம்படும் போது நமது பொருளாதாரமும் மேம்பாடு காணும். அத்தருணத்தில் அனைத்து நிலைகளிலும் நமது இந்திய சமுதாயம் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்” என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கல்வியிலும் வியாபாரத்துறைகளிலும் நாம் முக்கியத்துவம் தர வேண்டும். வருங்கால சங்கதியினர் வளமுடன் வாழ, இளமையிலேயே நாம் நமது பிள்ளைகளுக்கு இத்துறைகளில் அவர்கள் சிறந்திருக்க தயார் படுத்தவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதே வேளையில் தமிழ் புத்தாண்டிற்கு மறுநாள், விஷுப் புத்தாண்டை வரவேற்கக்கூடிய அனைத்து மலையாள வம்சாவளியினருக்கும், வைசாகி பெருநாளைக் கொண்டாடக்கூடிய சீக்கிய அன்பர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த வாரம் உகாதி திருநாளைக் கொண்டாடிய தெலுங்கு வம்சாவளியினருக்கும் தமது உகாதி வாழ்த்துக்களை கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.